விலக்கு பெற சட்டசபையில் இன்று தீர்மானம்: நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


விலக்கு பெற சட்டசபையில் இன்று தீர்மானம்: நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 12 Sep 2021 8:58 PM GMT (Updated: 12 Sep 2021 8:58 PM GMT)

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம்

நெல்லை:
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. எனவே, நீட் தேர்வுக்கு பயந்து மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மெகா தடுப்பூசி முகாம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர்ப்புற சுகாதார நிலையத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட அவர், எந்தெந்த பகுதியில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதையும் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
4 கோடி பேருக்கு தடுப்பூசி
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 952 முகாம்களில் 62 ஆயிரத்து 650 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் 58 ஆயிரத்து 608 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 3 கோடியே 74 லட்சத்து 89 ஆயிரத்து 89 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை 4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநில எல்லையில் உள்ள தென்காசி, கன்னியாகுமரி, கோவை உள்பட 9 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மரபணு ஆய்வகம்
டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரசை கண்டறியும் ஆய்வகங்கள் பெங்களூருவில்தான் உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து மாதிரிகளை அனுப்பி முடிவுகளை தெரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
மேலும் ஒரு பரிசோதனைக்கு ரூ.4 ஆயிரம் செலவாகிறது. எனவே, சென்னையில் ரூ.4 கோடியில் மரபணு மாற்ற வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார்.
நீட் தேர்வுக்கு விலக்கு
நீட் தேர்வுக்கு பயந்து மாணவ-மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதிக்கும் அழுத்தம் கொடுக்கப்படும். 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அங்கு ஒரு கட்டிடம்கூட கட்டவில்லை. அங்குள்ள மாணவர்களை மதுரை அரசு மருத்துவக் கல்லூரி அல்லது கலைக்கல்லூரியில் சேர்க்குமாறு மத்திய அரசு கூறுகிறது. அவ்வாறு சேர்ப்பது இயலாதது.
அரசு தயார்
எனவே, மத்திய அரசு உடனடியாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டிடங்களை கட்டி மாணவர் சேர்க்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அனுமதி கொடுத்தால் உடனே மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், சண்முகையா, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எல்.எஸ்.லட்சுமணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், டாக்டர் சுகன்யாதேவி, பகுதி சுகாதார செவிலியர் விஜிதா செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி தட்டுப்பாடு
பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் நடந்த முகாமில் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆப்பிள் பழம் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று 951 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 75 ஆயிரத்து 520 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு சில மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
தென்காசி
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் 651 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. தென்காசி நகரசபை அலுவலகத்தில் நடந்த முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில் 'தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் 44 ஆயிரத்து 130 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இன்றும் (திங்கட்கிழமை) சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படும். 
புதிதாக அமைக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளை விரைவில் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அங்கு விரைவில் அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்' என்றார்.
அப்போது, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை, தென்காசி நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், ஓணம் பீடி அதிபரும் தொழிலதிபருமான பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தென்காசியில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்று அமைச்சரிடம், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் மனு வழங்கினார்.
...........

Next Story