கலபுரகி மாநகராட்சி மேயர் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு; குமாரசாமி பதில்
கலபுரகி மாநகராட்சி மேயர் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து குமாரசாமி பதிலளித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆதரவான மனநிலை
கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவான மனநிலையில் உள்ளனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வோம். கர்நாடக சட்டசபை கூட்டம் நாளை (இன்று) தொடங்குகிறது. இதில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள். மக்கள் பிரச்சினைகளை எழுப்பி அரசின் கவனத்தை ஈர்ப்பார்கள். பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
கலபுரகி மாநகராட்சி மேயர் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை மறுநாள் (அதாவது நாளை) நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனைவரின் கருத்துகளையும் கேட்ட பிறகு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா இறுதி முடிவு எடுப்பார். கலபுரகி மாநகராட்சி தேர்தல் எங்களுக்கு முக்கியமல்ல. கலபுரகி மாநகராட்சி மேயர் பதவி தொடர்பாக மந்திரி ஆர்.அசோக் என்னை சந்தித்து பேசினார். அதுபற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வோம்.
தீவிரமாக செயல்படுவோம்
2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி அதிக இடங்களில் பெற வைப்பது தான் எங்களின் நோக்கம். அந்த நோக்கத்தில் நாங்கள் தீவிரமாக செயல்படுவோம். சிலர் ஜனதா தளம் (எஸ்) கட்சி எங்கே என்று கேள்வி கேட்கிறார்கள். அத்தகையவர்களுக்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கலபுரகி மாநகராட்சி மேயர் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனதா தளம் (எஸ்) கட்சியிடம் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story