வாலிபர் கற்பழிக்க முயன்றதால் மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை
பெங்களூரு அருகே மைனர் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை, ஒரு வாலிபர் கற்பழிக்க முயன்றதால் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
மைனர் பெண் தற்கொலை
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா நந்தகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 17 வயதில் மகள் இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த அந்த மைனர் பெண் திடீரென்று விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் வாயில் நுரை தள்ளியபடி அவர் உயிருக்கு போராடினார். வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய போது தங்களது மகள், உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் மைனர் பெண் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நந்தகுடி போலீசார், ஆஸ்பத்திரிக்கும், மைனர் பெண்ணின் வீட்டுக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள்.
கற்பழிக்க முயற்சி
அப்போது அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அதில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தன்னை சுப்பிரமணியா கற்பழிக்க முயன்றார். அவரிடம் இருந்து எப்படியே தப்பித்து ஓடிவந்து விட்டேன். என்னை பற்றி சக வாலிபர்களிடம், தவறாக சுப்பிரமணியா கூறி இருந்தார். அந்த அவமானம் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு சுப்பிரமணியாவே காரணம். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று மைனர் பெண் கூறி இருந்தார்.
மைனர் பெண்ணை சுப்பிரமணியா கற்பழிக்க முயன்றதால், அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நந்தகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட வாலிபர் சுப்பிரமணியாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story