மாவட்ட செய்திகள்

அரசின் சுகாதார சேவைகளை நிர்வகிக்க பெங்களூருவுக்கு தனி ஆணையம் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு + "||" + A separate commission will be set up for Bangalore

அரசின் சுகாதார சேவைகளை நிர்வகிக்க பெங்களூருவுக்கு தனி ஆணையம் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு

அரசின் சுகாதார சேவைகளை நிர்வகிக்க பெங்களூருவுக்கு தனி ஆணையம் - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
அரசின் சுகாதார சேவைகளை நிர்வகிக்க பெங்களூருவுக்கென தனி ஆணையம் உருவாக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
  
ஆம்புலன்சுகள் சேவை

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை சார்பில் சுகாதார கவச திட்டத்தின் கீழ் புதிதாக 120 அதிநவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்சுகளின் சேவை தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, புதிய ஆம்புலன்சுகளின் சேவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  பெங்களூருவில் அரசால் வழங்கப்படும் சுகாதார சேவைகள் அனைத்தும் ஒரு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். வரும் நாட்களில் இதற்கென தனியாக சுகாதார சேவைகள் ஆணையம் உருவாக்கப்படும். சுகாதாரத்தின் உயிர்நாடி ஆம்புலன்சு. உடல் ஆரோக்கியம் எப்போது மோசமாகும் என்பது யாருக்கும் தெரியாது. உடல் பாதிக்கப்படும்போதும், அவசர சேவைக்கு ஆம்புலன்சு தேவைப்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்

  இந்த ஆம்புலன்சுகள் நோயாளிகளை அழைத்து செல்லும் வாகனங்களாக மட்டுமின்றி அவசர சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் நிலை ஏற்பட வேண்டும். இந்த 108 ஆம்புலன்சு வாகனங்கள் கிராமப்புறங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. கொரோனா நமது கண்களை திறந்துள்ளது. சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 70 ஆண்டுகள் நாம் அக்கறை செலுத்தவில்லை.

  நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கைகள் இல்லை. ஐதராபாத்-கர்நாடக பகுதியில் 10 ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு படுக்கை தான் உள்ளது. நோயாளிகள்-டாக்டர்கள் விகிதமும் அதிகரிக்கப்பட வேண்டும். மண்டல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. இதையும் சரிசெய்ய வேண்டும். கொரோனா முதல் மற்றும் 2-வது அலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டோம். அது சுலபமானதாக இருக்கவில்லை.

ஊட்டச்சத்து குறைபாடு

  கொரோனா தடுப்பு பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காகவே போலீஸ், டாக்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் பகல்-இரவாக பணியாற்றுகிறார்கள். டாக்டர்கள் இறைவனின் தூதர்கள். 108 ஆம்புலன்சுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும். இதன் மூலம் நோயாளிகள் இருக்கும் இடத்தை சுலபமாக கண்டறிந்து விரைவாக சென்றடைய முடியும். உயிர் காக்க உதவும் அனைத்து மருத்துவ கருவிகளும் ஆம்புலன்சில் ஏற்படுத்தப்படும்.

  வரும் நாட்களில் சுகாதாரத்துறையில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குறிப்பாக யாதகிரி, ராய்ச்சூர், கலபுரகி மாவட்டங்களில் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இது ஒரு பெரிய பிரச்சினை.

தரமான சுகாதார சேவைகள்

  கடைகோடியில் உள்ள மக்களுக்கும் சிறப்பான தரமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும். சுகாதார சேவைகளில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சுகாதார சேவைகளை நேர்மையான முறையில் செய்ய வேண்டும். இதில் பொறுப்பற்ற முறையில் இருக்கக்கூடாது. சுகாதாரமான கர்நாடகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  அதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேசியதாவது:-

  கர்நாடகத்தில் சுகாதார கவச திட்டத்தின் கீழ் ஏற்கனவே 710 ஆம்புலன்கள் சேவையாற்றி வருகின்றன. இந்த நிலையில் மேலும் 120 புதிய ஆம்புலன்சுகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இது நவீன வசதிகள் கொண்ட ஆம்புலன்சு ஆகும். சுகாதார சேவை திட்டங்களில் இந்த ஆம்புலன்சுகள் சேவை மிக முக்கியமானது. அவசர காலத்தில் மனித உயிரை காப்பாற்றுவதில் இந்த ஆம்புலன்சுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

நவீன மயமாக்கப்படும்

  இதய நோய், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்களை மிக விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அந்த நேரம் ‘தங்க நேரம்’ என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய நேரத்தில் இந்த ஆம்புலன்சுகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த ஆம்புலன்சுகளின் தொடர்புகளை அதிகப்படுத்தி சேவையை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது இந்த 108 ஆம்புலன்சு சேவை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் நவீன மயமாக்கப்படும். மருத்துவமனைகளின் வரைபடம், ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி கொண்டால், ஒருவர் போன் செய்த 15 நிமிடங்களில் அந்த இடத்தை அடைய முடியும். தற்போது போன் செய்த பிறகு ஆம்புலன்சு வந்து சேர நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிகபட்சமாக 45 நிமிடங்கள் ஆகின்றன.

டெண்டருக்கு அழைப்பு

  அடுத்து வரும் நாட்களில் இந்த ஆம்புலன்சுகளின் சேவை இன்னும் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டு, டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்சு சேவை விரைவாக கிடைக்க பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படும். தற்போது 1 லட்சம் பேருக்கு 1 ஆம்புலன்சு சேவை வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் 50 ஆயிரம் பேருக்கு ஒரு ஆம்புலன்சு வசதியை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

  இந்த ஆம்புலன்சில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் துணை சுகாதார பணியாளர்களுக்கு மேலும் பயிற்சி அளிக்கப்படும். கர்நாடகத்தில் தற்போது தினசரி 3.80 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதை 5 லட்சமாக உயர்த்த முயற்சி செய்து வருகிறோம். கர்நாடகத்தில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்கியுள்ளது. விரைவில் இந்த புதிய மைல்கல்லை அடைவோம்.
  இவ்வாறு சுதாகர் பேசினார்.

  இந்த விழாவில் கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு, தோட்டக்கலை துறை மந்திரி முனிரத்னா, பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.