மேட்டூர் அருகே பரிதாபம்: ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை-எடப்பாடி பழனிசாமி- உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி


மேட்டூர் அருகே பரிதாபம்: ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை-எடப்பாடி பழனிசாமி- உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 13 Sept 2021 2:48 AM IST (Updated: 13 Sept 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அருகே ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேட்டூர்:
மேட்டூர் அருகே ‘நீட்’ தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
‘நீட்’ தேர்வு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூரை சேர்ந்தவர் சிவகுமார். இவருடைய மகன் தனுஷ் (வயது 19). பிளஸ்-2 முடித்த இவர், ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தார். ஏற்கனவே 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதி தோல்வி அடைந்து இருந்தாலும், இந்த முறை எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற முனைப்புடன் படித்து வந்தார். இந்த முறை தேர்ச்சி பெறாவிட்டால் மருத்துவ கனவு கானல் நீராகி விடுமோ என்ற அச்சமும் தனுசுக்கு இருந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ‘நீட்’ தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். தனுஷ் மட்டும் ‘நீட்’ தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று காலையில் வீட்டில் உள்ளவர்கள் கண்விழித்தனர். அப்போது ‘நீட்’ தேர்வு எழுத தயாராகிய தனுஷ் என்ன செய்கிறான் என்று பார்ப்பதற்காக அந்த அறைக்குள் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. மின்விசிறிக்கான கொக்கியில், தனது தந்தையின் வேட்டியில் தனுஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். தனுஷின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தனுஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
டாக்டர் படிப்பு
விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
கூழையூரை சேர்ந்த விவசாய கூலியான சிவகுமார்- ஜீவஜோதிக்கு 2 மகன்கள். மூத்த மகன் நிஷாந்த் தற்போதுதான் என்ஜினீயரிங் படிப்பை முடித்துள்ளார். 2-வது மகன் தனுஷ். சிறு வயதில் இருந்தே நன்றாக படிக்கக்கூடியவர். இதனால் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் மருத்துவ படிப்பு படிக்க விரும்பினார். அதற்காக ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தார்.
ஏற்கனவே 2 முறை எழுதி தோல்வி அடைந்தார். தற்போது 3-வது முறையாக ‘நீட்’ தேர்வுக்கு தயாராகி வந்தார். ஆனாலும் தேர்வு குறித்த பயமும் அவருக்கு இருந்தது. இதற்கிடையேதான் நள்ளிரவு நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
இதற்கிடையே தனுஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.
தகவல் அறிந்த தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சந்திரசேகரன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், மணி, முன்னாள் எம்.எல்.ஏ. செம்மலை மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேரில் வந்து தனுஷ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தனுஷின் தந்தை சிவகுமாருக்கு, எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின்
இதைத்தொடர்ந்து தி.மு.க. இளைஞர் அணி செய லாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க. நிர்வாகிகள் தனுஷ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் தனுஷ் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுவிர பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமைப்புகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் தனுஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு தனுஷ் உடல் அவர்களது சொந்த இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
கமல்ஹாசன் ஆறுதல்
இதற்கிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செல்போனில் தனுஷின் தந்தை சிவகுமாரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தனுஷின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், தைரியமாக இருங்கள் என்றும் ஆறுதல் கூறினார்.

Next Story