65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
குமரி மாவட்டத்தில், 625 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில், 625 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில் 65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மெகா தடுப்பூசி முகாம்
இந்தியா முழுவதும் கொரோனா முதல் மற்றும் 2-வது அலையால் பலரும் பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவித்தன. அதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. அதன்படி குமரி மாவட்டம் முழுவதும் நேற்று 625 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் 65 ஆயிரம் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. முகாமானது நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை நடந்தது. காலையில் முகாம்களில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. பின்னர் நேரம் செல்ல செல்ல முகாம்களில் மக்கள் குவிந்தனர்.
மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால், முகாம்களுக்கு மக்கள் குடும்பம், குடும்பமாக வர தொடங்கினர்.
பொதுமக்கள் ஆர்வம்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரி, அண்ணா பஸ்நிலையம், வடசேரி பஸ்நிலையம், வடசேரி மார்க்கெட், கோட்டார் பஜார், வாத்தியார்விளை, பெருவிளை, அருகுவிளை, கிறிஸ்துநகர், பார்வதிபுரம், கோட்டார் உள்பட மொத்தம் 105 இ்டங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வத்துடன் வந்திருந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஏராளமானோர் தடுப்பூசி முகாம்களுக்கு படையெடுத்தனர்.
மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட முகாம்களில் மட்டும், 10 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவை அனைத்தும் நேற்று மாலை 6 மணிக்குள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.
65 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
கிராமப்புற பகுதிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசிகளை போட்டு கொண்டனர். மாவட்டம் முழுவதும் 625 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மாலை 6.30 மணிக்கே 100 சதவீத தடுப்பூசி மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தி முடிக்கப்பட்டன.
அதாவது மெகா முகாமிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 65 ஆயிரம் தடுப்பூசியும், 65 ஆயிரம் பேருக்கு போடப்பட்டது. இதன்மூலம் மெகா முகாமிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 சதவீத தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story