பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம்: சேலம் மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு


பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம்: சேலம் மாரியப்பனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 12 Sep 2021 9:23 PM GMT (Updated: 12 Sep 2021 9:23 PM GMT)

பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற சேலம் மாரியப்பனுக்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஓமலூர்:
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற சேலம் மாரியப்பனுக்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
மாரியப்பனுக்கு வரவேற்பு
டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர், இந்திய பிரதமர் மோடி, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டிக்கு நேற்று மாலை மாரியப்பன் வந்தார்.
அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து மாரியப்பனை வரவேற்றார். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் காடையாம்பட்டி தாசில்தார் வாசுகி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், மாரியப்பனின் தாயார் சரோஜா, மனைவி ரோஜா மற்றும் குடும்பத்தினர், ஊர் மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். மாரியப்பனை ஊர் மக்கள் சிறிது தூரம் தோளில் தூக்கி வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பேட்டி
பின்னர் மாரியப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கத்தை எதிர்பார்த்திருந்த நிலையில் சாதகமற்ற சூழ்நிலையால் வெள்ளிப்பதக்கம் மட்டுமே பெற முடிந்தது. அடுத்தமுறை நிச்சயம் தங்கம் வெல்வேன். இந்த வெற்றியை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். மத்திய-மாநில அரசு வழங்கிய நிதியை கொண்டு விளையாட்டு துறைக்கு ஏதாவது செய்யலாம் என நினைத்து இருக்கிறேன். விளையாட்டு துறையில் கிராமப்புற இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை மேற்கொள்வேன்.
இவ்வாறு மாரியப்பன் கூறினார்.
2-வது முறையாக பதக்கம்
மாரியப்பன் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். தற்போது பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி 2-வது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story