5 மாதங்களுக்கு பிறகு வடநெம்மேலி முதலை பண்ணையில் பாம்பு கண்காட்சி - பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்


5 மாதங்களுக்கு பிறகு வடநெம்மேலி முதலை பண்ணையில் பாம்பு கண்காட்சி - பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்
x
தினத்தந்தி 12 Sep 2021 11:52 PM GMT (Updated: 12 Sep 2021 11:52 PM GMT)

வடநெம்மேலி் முதலை பண்ணையில் பாம்பு கண்காட்சி 5 மாதங்களுக்கு பிறகு தொடங்கப்பட்டது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

சென்னை, 

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வடநெம்மேலியில் உள்ள முதலை பண்ணையில் 1800-க்கும் மேற்பட்ட முதலைகள் பார்வையாளர்களுக்கு காட்சி படுத்தப்பட்டு நீர்நிரப்பிய தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 மாதங்களாக மூடப்பட்ட முதலை பண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்கு திறக்கப்பட்டது.

இங்கு வரும் பார்வையாளர்களுக்கு வார நாட்களில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மட்டும் தென் அமெரிக்கா காடுகளில் வாழும் ‘அனகோண்டா பாம்பு’ மற்றும் பிரேசில் காடுகளில் வாழும் சில பாம்புகள் பற்றிய 2 மணி நேர விழிப்புணர்வு கண்காட்சி, முதலை பண்ணை பெண் ஊழியர் மூலம் நடத்துவது வழக்கம்.

பாம்பு கடித்தால் உடலில் விஷம் ஏறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?. பாம்பை கண்டு பயம் கொள்ளாமல் இருக்க எப்படி தைரியம் வரவழைப்பது?. நம் வீட்டில் புகும் பாம்பை எப்படி லாவகமாக பிடிப்பது? என்பது பற்றி உயிருள்ள ‘அனகோண்டா பாம்பை’ கையில் பிடித்து கொண்டு பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது பெண் ஊழியரின் வழக்கம்.

இந்தநிலையில் 5 மாதங்களுக்கு பிறகு 1½ வயதுடைய 4 அடி நீளமுள்ள ‘அனகோண்டா பாம்பு’ மற்றும் பிரேசில் காடுகளில் வாழும் பாம்புகளை வைத்து பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் 2 மணி நேர கண்காட்சி நேற்று நடந்தது.

முதலை பண்ணை பெண் ஊழியர் ஸ்டெபிஜான், எந்தவித பயமும் இன்றி தன்னுடைய கைகளில் பாம்புகளை பிடித்து ‘அனகோண்டா பாம்பு’ மற்றும் பிரேசில் காடுகளில் வாழும் பாம்புகள் பற்றியும், பாம்பு கடித்தால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வரை உடலில் விஷம் ஏறாத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு முறைகள் பற்றியும் சுவாரசியமாக சுற்றுலா பயணிகளுக்கு விளக்கி கூறினார்.

சுற்றுலா வந்த பயணிகள் மற்றும் சிறுவர்கள் பலர் ஆர்வத்துடன் பாம்புகளை நெருங்கி அவர் கூறும் ஆலோசனைகளை கேட்டு தெரிந்து கொண்டு, புகைப்படம் எடுத்து ரசித்தனர்.

அதேபோல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் பாம்புகளை தங்கள் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்து அவை பற்றிய முழு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு தங்கள் பள்ளிக்கூட பாட தொகுப்புக்காக குறிப்புகள் எடுத்து கொண்டனர்.

Next Story