தமிழகத்தில் வாரம் ஒருமுறை பெரிய அளவில் தடுப்பூசி சிறப்பு முகாம் - தலைமை செயலாளர் இறையன்பு பேட்டி


தமிழகத்தில் வாரம் ஒருமுறை பெரிய அளவில் தடுப்பூசி சிறப்பு முகாம் - தலைமை செயலாளர் இறையன்பு பேட்டி
x
தினத்தந்தி 13 Sept 2021 5:26 AM IST (Updated: 13 Sept 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

அக்டோபர் மாதத்துக்குள் அனைவரும் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் வாரம் ஒருமுறை பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த வகையில் சென்னையில் மட்டும் பூங்கா, கல்லூரி, பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்கள், ஆஸ்பத்திரிகள் என 1,600 மையங்களில் தடுப்பூசி போட பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி, நங்கநல்லூரில் உள்ள சுதந்திர தின பூங்கா, அண்ணா பல்கலைக்கழக சுகாதார மையம், கஸ்தூரிபா நகர் சென்னை பள்ளி மற்றும் கோட்டூர்புரம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, பொதுத்துறை அரசு செயலாளர் டி.ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். தலைமை செயலாளர் இறையன்பு, தடுப்பூசி போட காத்திருந்த பொதுமக்களிடம் உரையாடினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்கனவே சென்னையில் நல்ல முறையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை ஆய்வு செய்தபோது பலரும் 2-வது தவணை தடுப்பூசி போட ஆர்வமாக காத்திருந்தனர். தடுப்பூசி போடுவதன் மூலம் நாம் பெரும் அளவில் கொரோனா நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்க முடியும். இவ்வாறு பெரிய அளவில் முகாம்கள் நடத்தும்போது மூலை முடுக்கில் இருக்கும் சாதாரண மக்களும் அவர்களின் வீட்டின் அருகிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்.

தமிழகத்தில் நடக்கும் இந்த பெரிய அளவிலான தடுப்பூசி முகாம்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த முகாமின் வெற்றியைத் தொடர்ந்து, வாரம் ஒருமுறை இதுபோன்று பெரிய முகாம்கள் நடத்தி அக்டோபர் மாத இறுதிக்குள் பெரிய அளவில் மக்களுக்கு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story