மாவட்டம் முழுவதும் மெகா முகாம் 1,209 மையங்களில் நடந்தது: 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்


மாவட்டம் முழுவதும் மெகா முகாம் 1,209 மையங்களில் நடந்தது: 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்
x
தினத்தந்தி 13 Sept 2021 6:01 AM IST (Updated: 13 Sept 2021 6:01 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மெகா முகாம் 1,000 மையங்களில் நடந்தது. இந்த முகாம் மூலம் 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

திருவள்ளூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசை முழுவதும் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு சார்பில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தமிழக அரசின் உத்தரவின்படி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் தடுப்பூசிகளை செலுத்த திட்டமிட்டு அதற்கான பணியை முடுக்கி விட்டார். அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாகவும் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 14 ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளில் ஏற்படுத்தப்பட்ட 1,209 மையங்களில் மெகா முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 4200 பணியாளர்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் முழுவதும் நடைபெற்றது. அதில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமில், பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அப்போது கொரோனா தடுப்பூசி போடும் பணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், தி.மு.க. திருவள்ளூர் நகர செயலாளர் ரவிச்சந்திரன், காஞ்சிப்பாடி சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த 4 ஊராட்சி ஒன்றியங்களில் 182 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதில் திரளான மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாம்களை பற்றி மக்களுக்கு விரிவாக தெரிவிப்பதற்காக பள்ளிப்பட்டு பேரூராட்சி அலுவலகம் எதிரே கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புள்ளிலைன் ஊராட்சியில் சிறப்பு தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் புதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. முகாமை மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம் தொடங்கிவைத்தார். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன் டாக்டர் திருமாவளவன் கலந்து கொண்டனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

அப்போது அவருடன் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், நகராட்சி நிர்வாக இயக்குனரும், கண்காணிப்பு அலுவலருமான பா.பொன்னையா, பொது சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story