தூத்துக்குடி, கோவில்பட்டியில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி, கோவில்பட்டியில்  சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2021 5:05 PM IST (Updated: 13 Sept 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் உத்தண்ட ராமன் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் வெங்கடேசன், அல்போன்ஸ் லிகோரி, பீட்டர் பர்னபாஸ், பரமசிவன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியசீலி ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் கலந்து கொண்டு பேசினார்.
கோரிக்கை
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஓய்வு ஊதிய விதிகளின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும், முதல்-அமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், சமூக நல ஆணையரின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி ஓய்வூதிய பலன்கள் நிலுவையை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத்தலைவர் பி.தங்கவேல் முன்னிலைவகித்தார். மாவட்ட துணை தலைவர் ஏ.சுப்பிர மணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பி.சேகர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
சத்துணவு வட்டத்தலைவர் டி.மாரியப்பன், அங்கன்வாடி வட்டக்கிளை ராமலட்சுமி, வட்ட செயலாளர் தங்கவேல் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story