உ.அம்மாபட்டி ஊராட்சியில் தரமற்ற குடிநீர் குழாய்களை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்
உ.அம்மாபட்டி ஊராட்சியில் தரமற்ற குடிநீர் குழாய்களை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உ.அம்மாபட்டி ஊராட்சி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்வதற்காக "ஜல்சக்தி மிஷன்" குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தது,
இந்தநிலையில் 4-வது வார்டு மஞ்சகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரு முழுவதும் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. இதையடுத்து குழாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
இதையடுத்து தரமற்ற பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது என்று கண்டனம் தெரிவித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், ஊராட்சி வார்டு கவுன்சிலர் ரஞ்சித்குமார் ஆகியோர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதை கண்டித்து உ.அம்மாபட்டி பஸ் நிறுத்தம் அருகே நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அவர்கள் ஊராட்சி துணைத் தலைவர் தலைமையில் குடிநீர் குழாய் உடைப்பு இடத்தில் அமர்ந்து சுமார் 3 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருப்பதி வாசகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தரமான குழாய் அமைத்து விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story