வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளாட்சி தேர்தல்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 9 மாவட்டங்களில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந் தேதிகளிலும், 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. 22-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை 23-ந் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் 25-ந் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 247 ஊராட்சிகள், 2,071 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 138 ஒன்றிய கவுன்சிலர்கள், 14 மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று மாலை அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அடுத்த மாதம் 16-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் அரசியல் கட்சியின் கொடி, அரசியல் கட்சி பிரமுகர்களின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர், பேனர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்றும்படி உத்தரவிடப்பட்டது.
7 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் தற்போதைய மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர்களின் புகைப்படம் அகற்றப்படும். மேலும் அங்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாது. அதேபோன்று புதியரேஷன் கார்டு விண்ணப்பம், முதியோர், விதவைகள் உதவித்தொகை விண்ணப்பம், சமூக நலத்திட்ட உதவிகள் கோருவது உள்ளிட்ட அனைத்து பொதுசேவைகளும் தேர்தலுக்கு பின்னரே செயல்படுத்தப்படும்.
7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பறக்கும் படை
2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு பறக்கும்படை, ஒரு நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.
வேலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story