கைக்குழந்தையுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த இளம்பெண்


கைக்குழந்தையுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த இளம்பெண்
x
தினத்தந்தி 13 Sept 2021 10:32 PM IST (Updated: 13 Sept 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

கைக்குழந்தையுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த இளம்பெண்

நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் தன்னையும், தனது கணவர் மற்றும் குழந்தையை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
கைக்குழந்தையுடன் வந்தார்
நாகை மாவட்டம் விழுந்தமாவடியை சேர்ந்த சிவராஜன் என்பவரது மனைவி சத்யபிரியா(வயது 26). இவர், தனது 6 மாத கைக்குழந்தையுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். அங்கு கலெக்டர் அருண் தம்புராஜை சந்தித்து அவர் கோரிக்கை மனுவை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
கட்டையால் தாக்கினர்
நானும் எனது கணவரும் 6 மாத கைக்குழந்தையுடன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தோம். அப்போது எனது தம்பி வினோத் குமார், அக்கா கணவர் ரகு மற்றும் அவருடைய தந்தை நடராஜன் ஆகிய 3 பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் தொழில் பிரச்சினை தொடர்பாக எங்களிடம் தகராறு செய்தனர். 
இதில் வினோத்குமார், ரகு, நடராஜன் ஆகிய 3 பேரும் சேர்ந்து என்னையும் எனது கணவர் மற்றும் கைக்குழந்தையை கட்டையால் தாக்கினர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும், வெளியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினர். 
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதில் காயம் அடைந்த எங்களை அக்கம், பக்கத்தினர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீண்டும் அவர்கள், எங்கள் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வருகின்றனர். 
எனவே எனக்கும், எனது கணவர் மற்றும் கைக்குழந்தைக்கும் உயிர் பாதுகாப்பு தர வேண்டும். எங்களை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Next Story