5 கூரை வீடுகள் எரிந்து நாசம்
சீர்காழியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
சீர்காழி:
சீர்காழியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
5 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டான்குடி சாலை கோவில்பத்து என்ற இடத்தில் சாலையோரம் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சாலையோரம் கூரை வீட்டில் வசித்து வந்த மூவேந்தன் (வயது 37) என்பவர் வீட்டில் திடீரென தீப்பிடித்தது.
பின்னர் இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த சுரேந்திரன் (34) தனலட்சுமி, ரோஸ்லின் (60), வள்ளிமயில் (40) ஆகிய 4 பேரின் வீடுகளிலும் தீப்பிடித்து எரிந்தது.
ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 5 வீடுகளும் எரிந்து நாசமடைந்தது.
இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்து பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் சேதமதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நிவாரணம் வழங்க நடவடிக்கை
தகவல் அறிந்த சீர்காழி தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பிரபாகரன், நகர துணை செயலாளர் பாஸ்கரன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் முருகன் ஆகியோர் நேரில் சென்று தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி அரசு மற்றும் கட்சி சார்பில் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Related Tags :
Next Story