விழுப்புரத்தான் வாய்க்காலை புனரமைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரம்


விழுப்புரத்தான் வாய்க்காலை புனரமைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Sept 2021 11:02 PM IST (Updated: 13 Sept 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாற்று நீரை கொண்டு வந்து விழுப்புரம் நகரின் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்த விழுப்புரத்தான் வாய்க்காலை சொந்த செலவில் புனரமைக்கும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் நகர பகுதி மக்களுக்கு நீர் ஆதாரமாக விழுப்புரம் பெரிய ஏரி, விராட்டிக்குப்பம் ஏரி, புது ஏரி, சித்தேரி, தட்டாம்பாளையம் ஏரி, மருதூர் ஏரி, முத்தாம்பாளையம் ஏரி, வழுதரெட்டி ஏரி ஆகியவை உள்ளன. இதில் சித்தேரியும், தட்டாம்பாளையம் ஏரியும் ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும், மற்ற ஏரிகள் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இவற்றில் விராட்டிக்குப்பம் ஏரி, முத்தாம்பாளையம் ஏரி, வழுதரெட்டி ஏரி ஆகிய ஏரிகளில் நீர்த்தேக்கம் சீராக உள்ளது.ஆனால் பெரிய ஏரி, புது ஏரி, சித்தேரி, தட்டாம்பாளையம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு நீர்த்தேக்கத்திற்கான வழித்தடம் இல்லை. இதனால் அந்த ஏரிகளில் நீர்த்தேக்கம் என்பது கேள்விக்குறியானது.
இதன் காரணமாக விழுப்புரம் நகரில் நிலத்தடி நீர்மட்டம் 80 முதல் 100 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. தண்ணீரில் சுண்ணாம்பு மற்றும் உப்பின் அளவு அதிகமாக இருப்பதால் அதனை குடிப்பதற்கும் ஏற்றதாக இல்லை. இதனால் விழுப்புரம் ஏரிகளுக்கு தென்பெண்ணையாற்றில் இருந்து வரும் வரத்து வாய்க்கால்களை மீட்க விவசாயிகள், பொதுமக்கள் முடிவு செய்தனர்.

வாய்க்கால் புனரமைப்பு பணி

அதாவது விழுப்புரம் அருகே தெளிமேடு தென்பெண்ணையாற்றில் இருந்து உருவாகும் விழுப்புரத்தான் வாய்க்கால் மூலம் 22 கி.மீ. தூரம் விழுப்புரம் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு வழித்தடம் உள்ளது. இந்த நீர்வழிப்பாதை புதர்கள் மண்டியும், பராமரிப்பு இல்லாததாலும் நீர்வரத்து என்பது கேள்விக்குறியானது. அதோடு கடந்த 2003-ம் ஆண்டு அமைக்கப்பட்ட புறவழிச்சாலையால் விழுப்புரத்தான் வாய்க்கால் விராட்டிக்குப்பம் கூட்டுசாலை பகுதியில் மூடப்பட்டது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் இருந்து விழுப்புரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் இல்லாமல்போனது.
இதையடுத்து இந்த விழுப்புரத்தான் வாய்க்காலை சீரமைக்கக்கோரி நகர மக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அரசு அதற்கு செவிசாய்க்காததால் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் இந்த வாய்க்காலை புனரமைக்க முடிவு செய்தனர்.

பாதியில் நிறுத்தம்

இதற்காக அவர்கள் விழுப்புரத்தான் வாய்க்கால் குழு என்ற ஒரு குழுவை ஆரம்பித்து தங்கள் சொந்த செலவில் வாய்க்காலை புனரமைக்கும் பணியை கடந்த 2016-ல் தொடங்கினர். இவர்கள் எடுத்த முயற்சியால் தெளிமேட்டில் இருந்து 14 கி.மீ. தூரமுள்ள நன்னாடு கிராம எல்லை வரை வாய்க்கால் புனரமைக்கப்பட்டு அதன் மூலம் தென்பெண்ணையாற்று தண்ணீர் நன்னாடு, ஆலாத்தூர் ஏரிகளுக்கு வந்ததன் மூலம் அந்த ஏரிகள் அதன் முழு நீர்மட்ட கொள்ளளவை எட்டியது. நன்னாடு கிராம எல்லை வரை வாய்க்கால் சீரமைப்பு பணி கடந்த 2019-ம் ஆண்டில் நிறைவடைந்தது.
அதன் பிறகு தொடர்ந்து வாய்க்கால் புனரமைப்பு பணியை மேற்கொள்ள போதிய நிதி ஆதாரம் இல்லாதால் அப்பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டது. அப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள அரசிடமிருந்தும் எந்த உதவியும் இல்லை. இந்த நிலையில் அரசை எதிர்பாராமல் தற்போது விழுப்புரத்தான் வாய்க்கால் குழுவினர், போதிய நிதி ஆதாரம் இல்லாமல் பாதியிலேயே விட்ட பணியை தாங்களே முழுவதுமாக முடிக்க முடிவு செய்து அந்த பணியை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் தங்களது சொந்த செலவிலேயே பணிகளை தொடங்க ஆயத்தமாகினர். 

நிதி உதவி

இதையறிந்த நகர வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தாமாக முன்வந்து தங்களால் இயன்ற நிதி உதவி செய்தனர். குறிப்பாக பல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் தங்கியிருந்து பணியாற்றி வரும் விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள், வருங்கால சந்ததியினருக்காக தாராளமாக நிதி உதவி வழங்கினர். அதுமட்டுமின்றி விவசாயிகள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் டி.மோகன், கடந்த மாதம், இந்த ஏரிகளின் நீர்வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு நீர்வழிப்பாதை இல்லை என்பதை அறிந்து உடனடியாக மழைக்காலத்திற்கு முன்பாக வாய்க்காலை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் விளைவாக தற்போது விழுப்புரத்தான் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்பு பாதியில் நிறுத்தப்பட்ட நன்னாட்டில் இருந்து மீதமுள்ள 6 கி.மீ. தூரம் உள்ள விழுப்புரம் பெரிய ஏரி, புது ஏரிகளுக்கு நீர்வரத்து வாய்க்கால் புனரமைக்கும் பணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தூர்ந்துபோன வாய்க்காலை அக்குழுவினர், பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டெடுத்து அதனை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்முரம்

 நன்னாடு ஏரியில் இருந்து விராட்டிக்குப்பம் ஏரி வரை வாய்க்கால் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. ஆனால் விராட்டிக்குப்பம் ஏரியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து நெல், கரும்பு பயிர் செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகள், வாய்க்கால் புனரமைப்பு பணிக்கு இடையூறாக உள்ளது. எனவே அந்த ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் அகற்றி வாய்க்கால் புனரமைக்கும் பணிகள் தடையின்றி நடைபெற வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் விழுப்புரம் புறவழிச்சாலையில் விராட்டிக்குப்பம் பகுதியில் வாய்க்கால் பாலம் அமைத்தால் தண்ணீர், விரைவாக விராட்டிக்குபபம் ஏரிக்கு செல்லும். இதற்காக வாய்க்கால் வசதி அமைத்துக்கொடுக்குமாறு ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆகவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், விராட்டிக்குப்பம் பகுதியில் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு சாலை வழியாக திருக்கோவிலூருக்கு செல்ல சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக இப்பணியை விரைந்து முடித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது

ஏனெனில் விழுப்புரத்தான் வாய்க்கால் புனரமைப்பு பணிகள் முடிந்தால் விழுப்புரம் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. விழுப்புரம் நகரத்திற்கு மேற்கே உள்ள விழுப்புரம் ஏரிகளில் 337 ஏக்கர் 37 செண்ட் பரப்பளவில் நீரை சேமிக்க முடியும். இதன் மூலம் விழுப்புரம் நகராட்சி பகுதிகள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களுக்கும் முக்கிய நீர்ஆதாரமாக விளங்கும்.

Next Story