ஆவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஆவூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவூர்:
ஆடுகள் மேய்ச்சல்
விராலிமலை தாலுகா, வில்லாரோடை கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 58). இவரது மகன் சண்முகம் (32) 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். வில்லாரோடை பகுதியில் ஆடுகளுக்கு சரியாக மேய்ச்சல் இல்லாததால் சண்முகம் அவருடைய ஆடுகளை திருச்சி மாவட்டம், மணிகண்டம் பகுதிக்கு ஓட்டி சென்று தனது மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்து ஆடுகளை மேய்த்து வருகிறார். சண்முகத்தின் தந்தை பழனிசாமி மட்டும் வில்லாரோடையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார்.
5 பவுன் நகை-பணம் கொள்ளை
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிச்சாமி உணவு அருந்திவிட்டு வீட்டின் வெளிப்புறம் ஓரமாக கட்டிலில் படுத்து தூங்கி விட்டார். பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறக்கப்பட்டு அதனுள்ளே வைத்து இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து அவர் தனது மகன் சண்முகத்திற்கும், மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் உள்ளிட்ட போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கு உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story