டிரைவரை ஏமாற்றி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.45 ஆயிரம் மோசடி
மீன்சுருட்டியில் சரக்கு வாகன டிரைவரை ஏமாற்றி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.45 ஆயிரம் மோசடி செய்த முக கவசம் அணிந்த 2 வாலிபர்களை மீன்சுருட்டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மீன்சுருட்டி
முக கவசம் அணிந்த வாலிபர்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலு (வயது 55). இவர் சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவருடைய மகன் அப்பு வெளி நாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்் தேதி மதியம் 12 மணி அளவில் மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் குடும்ப செலவுக்காக பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது ஏ.டி.எம். மையம் அருகே சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் முக கவசம் அணிந்து பணம் எடுப்பது போல் நின்றுள்ளார். அவரிடம் தனது ஏ.டி.எம். கார்டில் இருந்து ரூ.3 ஆயிரம் பணம் எடுத்துத் தரும்படி தனது ரகசிய எண்ணை கூறியுள்ளார். அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டை பெற்று ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பது போல் நடித்து, எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி, பாலு கொடுத்த ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக அதேபோன்று வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தனது நண்பரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார்.
மோசடி
பாலு தனது வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் அந்த 2 வாலிபர்களும் பாப்பாக்குடியில் உள்ள தேசியமயமாக்கப் பட்ட ஒரு வங்கி ஏ.டி.எம்மில் ரூ.3400 எடுத்துக்கொண்டு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்மில் ரூ.9500 என 2 முறை எடுத்து கொண்டு, அந்தப் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்றுள்ளனர்.
சுமார் 2 மணியளவில் ரூ.43 ஆயிரத்திற்கு ஒரு பவுன் தங்க செயின் எடுத்துள்ளனர். கையில் இருந்த ரூ.22 ஆயிரமும், ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.21 ஆயிரமும் கொடுத்துவிட்டு ஒரு பவுன் தங்க செயின் வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பாலுவின் செல்போனுக்கு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.43,400 ஆயிரம் எடுக்கப்பட்டது குறித்த குறுந்தகவல் வந்தது.
வலைவீச்சு
அதை பார்க்காமல் மாலையில் மீன்சுருட்டியில் உள்ள அதே வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முற்பட்டபோது வங்கி பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை பார்த்து விட்டு, வங்கிக்குள் சென்று தனது ஏ.டி.எம்மில் பணம் எடுக்க முடியவில்லை என்று கூறியதால் வங்கி மேலாளர் அவருடைய ஏ.டி.எம். கார்டை பார்த்தார். அப்போது இது உங்களுடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என்று கூறியுள்ளார். இதையறிந்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பாலு கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் இதுகுறித்து விசாரணை நடத்தி சரக்கு வேன் டிரைவரிடம் நூதன முறையில் ஏமாற்றி ஏ.டி.எம்.கார்டு மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களையும் தேடி வருகின்றார். மேலும் பாலுவிடம் இருந்த ஏ.டி.எம்.கார்டை பற்றி விசாரணை நடத்தியதில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் ஏ.டி.எம். கார்டு என்பது தெரிய வந்தது.
அந்த பெண் இதே போல் அந்த வாலிபர்களிடம் பணம் எடுக்க கூறியதாகவும் ஆனால் அவர்கள் இதில் பணம் இன்று எடுக்க முடியாது. நாளை பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்கள் வைத்து இருந்த வேறு ஒரு கார்டை கொடுத்துவிட்டு, அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரம் எடுத்து கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story