விஷ பாட்டிலுடன் மனு கொடுக்க வந்த முதியவர்
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு விஷ பாட்டிலுடன் முதியவர் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர், தனது மகனான ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டைவிட்டு துரத்தியதாக புகார் கொடுத்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மனு கொடுக்க வந்த ஒரு முதியவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது முதியவரின் கை பையில் மனுவுடன் விஷபாட்டில் இருந்தது. உடனடியாக அந்த விஷபாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் அருகே தண்டரை கிராமத்தை சேர்ந்த பெருமாள்(67) என்பதும், சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்ததும் தெரியவந்தது.
வீட்டைவிட்டு துரத்தினார்
இது குறித்து பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு ஏக்கர் 2 சென்ட் நிலத்தை வாங்கி, அதில் கிணறுவெட்டி விவசாயம் செய்து வந்தேன். எனக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.
மூத்த மகன் கமலக்கண்ணன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவர் என்னையும், எனது மனைவி தெய்வநாயகியையும் காலம் முழுவதும் வைத்து, சாப்பாடு போடுவதாக கூறி சென்னைக்கு அழைத்துச்சென்றார்.
ஆனால் அங்கு சென்றதும், எங்களிடமிருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் எழுதி வாங்கிக்கொண்டார். சிறிது நாட்களில், எங்களுக்கு சாப்பாடு போடாமல் எங்காவது சென்று பிச்சை எடுங்கள் என்று கூறி வீட்டைவிட்டு துரத்தி விட்டனர்.
சொத்தை ரத்து செய்ய...
தற்போது எனது மகன் சென்னையில் அடுக்குமாடி வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். 16 கார்களுடன் டிராவல்சும் நடத்தி வருகிறார். தற்போது எனது பேரனும் காவல்துறையில் இருக்கிறார்.
எனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி காலத்தில் சொத்துக்களை எழுதிவாங்கிக்கொண்டு எங்களை தவிக்கவிட்டு விட்டார். எனவே இது தொடர்பாக கலெக்டர் நடவடிக்கை எடுத்து, நாங்கள் எழுதிக்கொடுத்த சொத்தை ரத்துசெய்து, அவற்றை எங்களிடமே மீண்டும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வதற்காக இங்கே வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பெருமாள், கோரிக்கை மனுவை அங்குள்ள புகார் பெட்டியில் போட்டுவிட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story