கோவில் நிலத்தில் உள்ள மண்டபத்தை கைப்பற்றக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 13 Sep 2021 5:59 PM GMT (Updated: 13 Sep 2021 5:59 PM GMT)

கோவில் நிலத்தில் உள்ள மண்டபத்தை கைப்பற்றக்கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தாமரைக்குளம்
மண்டபத்தை கைப்பற்ற வலியுறுத்தல்
கண்டிராத்தீர்த்தம் கிராமத்தில் அய்யனார் கோவிலில் காலியாக உள்ள இடத்தில் பொதுமக்களிடம் பணம் திரட்டி மண்டபம் கட்டப்பட்டது. இம்மண்டபத்தை சிலர் அதிக வாடகைக்கு விடுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர் ஆய்வு செய்தார். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமழபாடியில் உள்ள நிர்வாக அலுவலருக்கு கருப்புசாமி அய்யனார் கோவிலில் உள்ள மண்டபத்தில் கையகப்படுத்த கடிதம் மூலம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக கோவில் நிலத்திற்கு குத்தகை செலுத்தாதவர்கள் உள்ளிட்ட சிலரை வைத்து டிரஸ்ட் அமைத்து மண்டபத்தை கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் கண்டிராத்தீர்த்தம் கிராம மக்கள் நேற்று மனு அளித்துள்ளனர். 
இதேபோல் ஊரில் பிரதமர் வீடு கட்டும் திட்டம், தோட்டக்கலை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் நடைபெறும் பணிகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து கோவில் நிலத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தி ஊர் பொது மக்களுக்கு குறைந்த வாடகை மண்டபம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மணல் குவாரி அமைக்க வேண்டும்
அசாவீரன் குடிகாடு டயர் மாட்டு வண்டி உரிமையாளர் நல சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் தளவாய் பகுதியில் வெள்ளாற்றில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந் தேதி முதல் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாட்டுவண்டி மணல் குவாரி மூடப்பட்டது. இதன்மூலம் சுமார் 1500 மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். தற்போது மணல் குவாரி மூடப்பட்டுள்ளதால் வறுமையில் வாடி வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் சேத்தன்மங்கலம் கிராமத்தில் வெள்ளாற்றில் மணல் குவாரி தொடங்கி மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்க்கையை காப்பாற்றிட வேண்டும் என்று கூறியுள்ளனர். 

Next Story