மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை பழைய இடத்திற்கே மாற்றக்கோரி காத்திருப்பு போராட்டம்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது


மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை பழைய இடத்திற்கே மாற்றக்கோரி காத்திருப்பு போராட்டம்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
x
தினத்தந்தி 13 Sept 2021 11:53 PM IST (Updated: 13 Sept 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை பழைய இடத்திற்கே இடமாற்றம் செய்யக்கோரி மாற்றுத்திறன் உடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:
காத்திருப்பு போராட்டம்
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கலெக்டர் அலுவலகத்தில் தரை தளத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன் பழைய இடத்திலேயே மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று பழைய இடத்திற்கே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறன் உடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
குற்றச்சாட்டு
போராட்டத்தின் போது தற்போது உள்ள அலுவலகம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து தொலைவில் இருப்பதால், தங்களால் அங்கு எளிதில் சென்று வர முடியவில்லை என்றும், கழிவறை வசதி இல்லை எனவும், ஜெராக்ஸ் எடுக்க அருகில் கடைகள் இல்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருகன் தட்சிணாமூர்த்தி, நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் செயல்பட்டு வந்த இடத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ஒதுக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை மாற்றுத்திறனாளிகள் ஏற்கவில்லை. மாறாக அந்த அலுவலகம் சற்று தொலைவில் இருப்பதாகவும், போதிய அடிப்படை வசதிகள் அங்கு இல்லை எனவும் கூறினர்.
கலெக்டர் உறுதி
இதையடுத்து அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நிர்வாகிகளை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் ஸ்ரேயாசிங் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அறை ஒன்றை கலெக்டர் அலுவலக தரைதளத்தில் ஒதுக்கி தருவதாக உறுதி கூறினார். இதையடுத்து காலை 10 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் பிற்பகல் 3 மணி அளவில் கைவிடப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story