எர்ணாபுரம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்
எர்ணாபுரம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
நாமக்கல்:
குடற்புழு நீக்க மாத்திரை
நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வருகிற 18-ந் தேதி வரை முதல் சுற்றும், 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் 2-வது சுற்றும், 27-ந் தேதி விடுபட்ட குழந்தைகளுக்கும் நடைபெற உள்ளது.
இதில் மாவட்டத்தில் உள்ள 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5,89,401 பேருக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள கர்ப்பிணி அல்லாத 1,53,830 பெண்களுக்கும் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசினார்.
கை கழுவும் முறை செயல் விளக்கம்
இந்நிகழ்ச்சியில் குடற்புழு நீக்க கையேட்டினை கலெக்டர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து பெற்றுக்கொண்டார். பின்னர், மாணிக்கம்பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவிகள் சுத்தமாக கை கழுவும் முறை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன், எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story