கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
தேசிய ஊரக திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
தேசிய ஊரக திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
நெல் கொள்முதல் நிலையம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது நடைபெறவில்லை. இதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்கின்றனர். நேற்றும் ஏராளமான மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார் தலைமையில் விவசாயிகள், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அதில், ‘திருக்குறுங்குடி பகுதியில் சுமார் 500 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளோம். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், வியாபாரிகள் விலை குறைப்பு, எடை மோசடி செய்கின்றனர். எனவே திருக்குறுங்குடி பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
பெண்கள் முற்றுகை
சமூகநீதி இயக்கங்களின் கூட்டமைப்பினர், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழரசு, தமிழர் உரிமை மீட்பு களம் ஒருங்கிணைப்பாளர் லெனின், திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் மாவட்ட செயலாளர் திருக்குமரன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, மனு வழங்கினர்.
அதில், ‘பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு கூண்டை அகற்றி சமூகநீதி காத்திட வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர். அதில், தங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் முழுமையாக வேலை வழங்க வேண்டும். சம்பளத்தை குறைக்காமல் வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
அரசு நிலங்களை மீட்க...
நேதாஜி சுபாஷ் சேனை நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் முத்து சரவணன் கொடுத்த மனுவில், ‘பாளையங்கோட்டை தாலுகா உத்தம பாண்டியன்குளம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை மீட்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.
ராஜவல்லிபுரம் செப்பறை வலபூமி பசுமை உலக நிறுவனர் மரசித்தர் அர்ஜூனன் வழங்கிய மனுவில், ‘மாவட்டம் முழுவதும் சோலைவனமாக மாற்ற மரம் வளர்க்க தனக்கு உதவிகள் செய்து தரும்பட்சத்தில் மிக குறுகிய காலத்தில் 33 சதவீத காடுகளை உருவாக்கி தருவேன்’ என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் ஏராளமான பெண்கள் தங்களுக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், பஞ்சாயத்து எழுத்தர் பணி வழங்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
Related Tags :
Next Story