விருத்தாசலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் வெளிநடப்பு


விருத்தாசலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 14 Sept 2021 12:34 AM IST (Updated: 14 Sept 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மது குடித்ததாக கூறிய கவுன்சிலரை கண்டித்து அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அப்போது கவுன்சிலர்களும் வெளியேறியதால் விருத்தாசலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்ட அரங்கிற்குள் வந்து அமர்ந்தனர். அந்த சமயத்தில் குப்பநத்தம் கிராம மக்கள் அலுவலகத்தின் முன்பு அடிப்படை வசதிகள் கேட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, அவர்களை சமாதானப்படுத்தி கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து காலதாமதமாக ஒன்றியக்குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவா வரவேற்றார்.

மதுஅருந்திய அதிகாரி

தொடர்ந்து கவுன்சிலர் சரவணன் (பா.ம.க.) கூறுகையில், எருமனூரில் நடந்து வரும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் என்.எம்.ஆர். பதிவேட்டை கிழித்தெறிந்த ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எந்நேரமும் மது அருந்திக்கொண்டு பணிக்கு வருகிறார். அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
அப்போது சரவணன், சம்பந்தப்பட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலரை பார்த்து, பதில் கூறுங்கள் என ஆவேசமாக கூறினார். இதனை சற்றும் எதிர்பாராத துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தான் மது அருந்துவது கிடையாது என மறுப்பு தெரிவித்து விட்டு, கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு ஆதரவாக சக அலுவலர்கள், சரவணனை கண்டித்து, கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். 

வெளிநடப்பு

மேலும் ஒன்றிய கவுன்சிலர்கள் சரவணன், பாக்யராஜ், செந்தில்குமார், அய்யாசாமி, செல்வராஜ், குணசேகர், ரோசி உள்ளிட்ட கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். அதிகாரிகளும், ஒன்றிய கவுன்சிலர்களும் போட்டிபோட்டுக்கொண்டு அடுத்தடுத்து வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் செல்லத்துரை, ஒன்றிய கவுன்சிலர்களை சமாதானப்படுத்தினார். அதன் பிறகு ஒன்றியக்குழு கூட்டம் வழக்கம் போல நடந்தது. முடிவில் ஒன்றியக்குழு துணை தலைவர் பூங்கோதை நன்றி கூறினார்.

Next Story