குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா


குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 13 Sep 2021 7:09 PM GMT (Updated: 13 Sep 2021 7:09 PM GMT)

கடலூர் அருகே குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் விவசாய நெல் பண்ணை நிலத்தில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு அதிகாரிகள்  நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்‌.
 இது பற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள், குப்பை கிடங்கு அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள்,  இங்கு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டால் மண்ணின் தன்மை மாறும். இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இங்கு குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என்று கூறி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
 இது பற்றி தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், தாசில்தார் பலராமன், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலவச வீட்டுமனைபட்டா

 அப்போது பொதுமக்கள், கண்டிப்பாக குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குப்பை கிடங்கு அமைக்காமல் இருப்பதற்கும், உங்களது கோரிக்கையின் படி இலவச மனைப்பட்டா வழங்குவதற்கும் உயர் அதிகாரிகளிடம் பேசி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதுதொடர்பாக வருகிற 18-ந்தேதி சமாதான கூட்டம் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து  சென்றனர். 

Next Story