கந்திகுப்பம் அருகே விபத்து கார்கள் நேருக்கு நேர் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி 3 பேர் படுகாயம்


கந்திகுப்பம் அருகே விபத்து கார்கள் நேருக்கு நேர் மோதி டிரைவர் உள்பட 2 பேர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 Sept 2021 12:55 AM IST (Updated: 14 Sept 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருப்பத்தூரை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பர்கூர்:
கந்திகுப்பம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் திருப்பத்தூரை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மேலும் இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் 
திருப்பத்தூர் மாவட்டம் பாய்ச்சல் வீரபத்தரசாமி வட்டத்தை சேர்ந்தவர்கள் கனிமுத்து செல்வன் (வயது 42). இவர் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சத்தியவாணி (30). இவர்கள் ஒரு காரில் பெங்களூருவில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்து சென்று கொண்டு இருந்தனர். காரை திருப்பத்தூர் அனுமந்த உபாசகர் பேட்டையை சேர்ந்த பிரபு (30) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த கார் நேற்று மாலை கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கந்திகுப்பம் அருகே கனிமேடு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை சவுகார்பேட்டை காசி செட்டி தெருவை சேர்ந்த நாராயணலால் (28), குமன்சிங் (38) ஆகியோர் மற்றொரு காரில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
2 பேர் பலி 
அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி, தடுப்பு சுவற்றை உடைத்து எதிர் திசைக்கு (கிருஷ்ணகிரி-சென்னை பை-பாஸ்) சென்று எதிரே பிரபு ஓட்டி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 2 கார்களும் நொறுங்கின. இதில் இடிபாடுகளில் சிக்கி கனிமுத்து செல்வன், டிரைவர் பிரபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும் கனிமுத்து செல்வத்தின் மனைவி சத்தியவாணி மற்றும் மற்றொரு காரில் வந்த நாராயணலால், குமன்சிங் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்தனர் 
அதன்பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் விபத்தில் பலியான கனிமுத்துசெல்வன், பிரபு ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
=========

Next Story