போத்தனூர் பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்குவது எப்போது?


போத்தனூர் பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்குவது எப்போது?
x
தினத்தந்தி 13 Sep 2021 7:25 PM GMT (Updated: 13 Sep 2021 7:25 PM GMT)

போத்தனூர் பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்குவது எப்போது

கிணத்துக்கடவு

போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்குவது எப்போது என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்பாதை

கோவை மாவட்டம் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே இருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் கோவையில் ரெயில் நிலையத்தில் இருந்து போத்தனூர்-பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு வழியாக ரெயில் சேவை தொடங்கியது. 

ஆரம்பத்தில் இந்த வழித்தடத்தில் கோவையில் இருந்து ஒரே ஒரு ரெயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் காலை, மாலை நேரங்களில் 2 ரெயில்கள் இயக்கப்பட்டது. 

இதன்படி, கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கும், மதுரைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவைக்கு 3 ரெயில் இயக்கப்பட்டது.

ரெயில் போக்குவரத்து நிறுத்தம்

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த 3 ரெயில்களும் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில், போத்தனூர்-பொள்ளாச்சி இடையே 40 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரெயில் பாதையை மின்மயமாக்கல் பணி தொடங்கியது.

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த பணி தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து மின்சார ரெயில் என்ஜினை கொண்டு சோதனை ஓட்டமும் நடந்தது. 

போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்வே வழித்தடத்தில் இன்னும் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட வேண்டி உள்ளதால் இந்த பணிகள் முடிவடைய சில மாதங்கள் ஆகலாம் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதிகாரி ஆய்வு

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில் வழிப்பாதையை ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி இடையே ரெயில்கள் இயக்க முறையான அறிவிப்பு வெளியாகும் என்று என ரெயில்வே துறையினர் தகவல் தெரிவித்தனர். 

ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே எப்போது ரெயில் சேவை தொடங்கும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பயணிகள் எதிர்பார்ப்பு

இதுகுறித்து ரெயில்வே பயணிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு போத்தனூர் வழியாக கோவைக்கு 3 முறை ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் கொரோனா தொற்று காரணமாக 3 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது. 

அதன் பின்னர் தற்போது போத்தனூர் -பொள்ளாச்சி இடையே உள்ள ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் தொடங்கி முடிவடைந்து ரெயில்கள் இயக்க தயார் நிலையில் உள்ளது.

ஆனால் இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் ஆர்வம் இல்லாமல் இருப்பதால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து கோவைக்கு செல்லும் நாங்கள் பஸ்சில் பயணம் செய்து வருகிறோம். இதனால் கூடுதல் செலவு ஆகிறது. 

மேலும் தற்போது கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் ரெயில் போக்குவரத்தை நம்பியிருந்த மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே எப்போது ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர். 

கட்டணத்தை உயர்த்த கூடாது

போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்படும்போது ரெயில் கட்டணத்தை உயர்த்த கூடாது. பழைய கட்டணத்தையே நிர்ணயம் செய்ய வேண்டும்.

ரெயில்வே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தீபாவளி பண்டிகைக்கு முன்பாக போத்தனூர்-பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story