நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளி
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளியாலும், மண்எண்ணெய் கேனுடன் வந்த வாலிபராலும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளியாலும், மண்எண்ணெய் கேனுடன் வந்த வாலிபராலும் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளி
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நடைபெறவில்லை. இதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு செல்கின்றனர். நேற்று பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் மனுக்களை வழங்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
சேரன்மாதேவி அருகே மேலஓமநல்லூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆறுமுகம் என்பவரும் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு தனது தரைச்சக்கர வண்டியில் அமர்ந்து கைகளால் தள்ளிக்கொண்டே மெதுவாக தவிழ்ந்தவாறு வந்தார்.
பூர்விக சொத்தை அபகரித்ததாக...
கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆறுமுகத்தை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த பெட்ரோல் நிரப்பிய கேனை பறிமுதல் செய்தனர். அப்போது ஆறுமுகம் தனது பூர்விக நிலத்தை தந்தை மற்றும் சகோரர்கள் அபகரித்ததாகவும், அதனை மீட்டுத்தரவில்லையெனில் தற்கொலை செய்து விடுவேன் என்று கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஆறுமுகத்தை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க செய்தனர்.
அந்த மனுவில், ‘கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, தனது பூர்விக சொத்தான 57 சென்ட் நிலத்தை தந்தையும், சகோதரர்களும் அபகரித்து விட்டனர். அதனை மீட்டுத்தருமாறு பலமுறை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆறுமுகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பும் மனு கொடுக்க வந்தபோது மண்எண்ணெய் கேனுடன் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
மண்எண்ணெய் கேனுடன் வந்த வாலிபர்
இதேபோன்று பாளையங்கோட்டை அருகே ஆயன்குளத்தைச் சேர்ந்த அந்தோணி செபஸ்டியன் (30), நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து, தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை போலீசார் பிடுங்கினர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்தோணி செபஸ்டியன் கூறுகையில், ‘நான் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்த ஒருவரை பார்க்க சென்றபோது, அங்கிருந்த காவலாளிகள் என்னை தாக்கினர். இதுகுறித்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, புகாரை பெற போலீசார் மறுத்து விட்டனர். உயர் அதிகாரியிடம் மனு கொடுக்க சென்றும் உரிய நடவடிக்கை இல்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றேன்’ என்று கூறினார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் கேனுடன் வந்த மாற்றுத்திறனாளியாலும், பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபராலும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story