தொழிலாளி தலை துண்டித்து படுகொலை


தொழிலாளி தலை துண்டித்து படுகொலை
x
தினத்தந்தி 14 Sept 2021 1:33 AM IST (Updated: 14 Sept 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.

நெல்லை:
நெல்லை அருகே தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார்.

வாலிபர் படுகொலை

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடுவூர்பட்டி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காட்டு பகுதியில் நேற்று இரவில் 35 வயதுடைய ஒருவர் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்தனர். பின்னர் அந்த நபரின் தலையை எங்கோ கொண்டு போட்டு விட்டு சென்று விட்டனர். உடல் மட்டும் அந்த காட்டுப்பகுதியில் கிடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விரைந்தார்

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு பார்த்திபன், முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தவாறே அங்கிருந்து காட்டுப் பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினாா்கள்.

தோட்ட தொழிலாளி

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் நெல்லை அருகே உள்ள கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கர சுப்பிரமணியன் (வயது 38) என்பதும், அங்குள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

ஆனால், கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெல்லை அருகே தொழிலாளி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story