சர்வதேச தரத்திலான ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரம்


சர்வதேச தரத்திலான ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 14 Sept 2021 1:36 AM IST (Updated: 14 Sept 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் சர்வதேச தரத்திலான ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்:
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் சர்வதேச தரத்திலான ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விளையாட்டு மைதானம்
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதிநகரில் 23 ஏக்கர் பரப்பளவில் அன்னை சத்யா விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. தடகள போட்டிகளான ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல், ஈட்டி எறிதல் ஆகியவை விளையாடுவதற்கும் தனித்தனியாக இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100 மீட்டர், 200 மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் போன்ற ஓட்டம் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மண் தரையிலான ஓடுதளத்தில் தான் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளும் இதே ஓடுதளத்தில் நடத்தப்பட்டது. மண் தரையில் பயிற்சி மேற்கொண்டு விட்டு சர்வதேச தரத்திலான செயற்கை இழை (சிந்தடிக்) ஓடுதளத்தில் வீரர், வீராங்கனைகள் ஓடும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகள் அனைத்தும் இதுபோன்ற ஓடுதளத்தில் தான் நடத்தப்படும்.
ஆய்வு
தஞ்சையில் செயற்கை இழை ஓடுதளம் இல்லாததால் இதுபோன்ற ஓடுதளத்தில் வீரர்கள் பயிற்சி பெற வேண்டும் என்றால் மதுரை, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு செல்லும் நிலை இருந்தது. இதனால் அவர்களுக்கு காலநேரம் வீணாவதுடன், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது. இப்படி வெளியூருக்கு அடிக்கடி சென்று வரும்போது விளையாட்டில் இருக்கக்கூடிய ஆர்வமும் குறைய வாய்ப்பு உள்ளது.
இதனால் மதுரை, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைபோல் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளம் தஞ்சையில் அமைக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் இந்திய விளையாட்டு குழுமம் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் ஆய்வு நடத்தியது.
செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி
அதில், மின்விளக்குகளுடன் சர்வதேச தரத்திலான செயற்கை இழை ஓடுதளம் அமைக்கலாம் என மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்தது. உயர்கோபுர மின்விளக்குகள் மற்றும் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க ரூ.6 கோடியே 86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக ரூ.1 கோடியே 38 லட்சத்தில் 4 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்டமாக ரூ.5 கோடியே 48 லட்சத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 400 மீட்டர் தூரத்திற்கான செயற்கை இழை ஓடுதளம் அமைக்கப்படுகிறது. தற்போது ஓடுதளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, அதனுள் செம்மண் கிராவல் நிரப்பி சமப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
4 மாதங்களில் நிறைவடையும்
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இன்னும் 4 மாதங்களில் செயற்கை இழை ஓடுதளம் தயாராகி விடும். இந்த ஓடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விளையாடக்கூடிய சிறந்த வீரர்கள் தஞ்சையில் இருந்து உருவாக வாய்ப்பு உள்ளது என்றனர்.

Next Story