இருதரப்பினர் மோதல் பேக்கரி டீக்கடை சூறை
தஞ்சையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பேக்கரி-டீக்கடை சூறையாடப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பேக்கரி-டீக்கடை சூறையாடப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. பிரமுகர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர தி.மு.க. இளைஞரணி செயலாளர் சுதாகர்(வயது 42), தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் பாண்டவர்(54), மாணவரணி நகர துணை செயலாளர் முருகேசன் உள்ளிட்ட 8 பேர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நடந்த கறி விருந்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் காரில் ஊருக்கு திரும்பி வந்தனர்.
தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே மன்னார்குடி-பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள பேக்கரி மற்றும் டீக்கடைக்கு சென்று டீ குடித்தனர்.
பேக்கரி-டீக்கடை சூறை
அந்த பேக்கரி மற்றும் டீக்கடையை தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன்(48) என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த பேக்கரி மற்றும் டீக்கடை அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று அங்கிருந்த பெண்ணிடம் சுதாகர் மற்றும் அவருடன் வந்தவர்கள் சிகரெட் கேட்டுள்ளனர்.
சிகரெட் கொடுக்க தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த பெண்ணை திட்டியதாக தெரிகிறது. இந்த செயலை தட்டிக்கேட்ட பேக்கரி மற்றும் டீக்கடை ஊழியர்களை சுதாகர் மற்றும் அவருடன் வந்தவர்கள் கடுமையாக தாக்கி கடையை சூறையாடியதாக தெரிகிறது.
தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 15 பேர் மீது வழக்கு
இந்த சம்பவத்தில் ஆனந்தன் தரப்பை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக பேக்கரியை சூறையாடிய அவர்கள் காரில் ஏறி தப்பிச்செல்ல முயன்றனர். இதை அறிந்த சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு வந்து காரில் தப்பிச்செல்ல முயன்றவர்களில் 6 பேரை பிடித்து தாக்கினர். மற்ற 2 பேரும் காரில் தப்பிச்சென்று விட்டனர். இந்த தாக்குதலில் தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 6 பேரும் காயம் அடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெட்டிக்கடையில் வேலைபார்க்கும் ரேவதி அளித்த புகாரின் பேரில் 6 பேர் மீதும், தி.மு.க. பிரமுகர் பாண்டவர் கொடுத்த புகாரின் பேரில் சூரக்கோட்டையை சேர்ந்த 9 பேர் மீதும் தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story