மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற விவசாயிகள் + "||" + Farmers marched to besiege Vidhan Sabha in Bangalore

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற விவசாயிகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற விவசாயிகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பெங்களூரு விதான சவுதாவை முற்றுகையிட சென்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
பெங்களூரு:

3 வேளாண் சட்டங்கள்

  மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் போராட்டக்களத்தில் ஒரு சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. பல கட்டங்களாக விவசாயிகள், மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

  ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கர்நாடக விவசாயிகள் சங்கம் சார்பில் செப்டம்பர் 13-ந் தேதி (அதாவது நேற்று) பெங்களூரு விதான சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகள்

  அதன்படி மைசூரு, தட்சிண கன்னடா, பெலகாவி, ராய்ச்சூர், பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை முதல் பஸ்கள், ரெயில்கள் மூலமாக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பெங்களூரு ரெயில் நிலையம் முன்பு உள்ள வளாகத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய விவசாய சங்க தலைவர்கள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும் கோஷங்களை எழுப்பி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

  இந்த நிலையில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் காலை 11.30 மணியளவில் கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் வந்தார். பின்னர் அவரும் சிறிது நேரம் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து விதான சவுதாவை நோக்கி விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். கோடிஹள்ளி சந்திரசேகர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தார்.

தள்ளுமுள்ளு

  பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் ரேஸ்கோர்ஸ் சாலை வழியாக விதான சவுதாவை நோக்கி சென்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ரேஸ்கோர்ஸ் சாலை மேம்பாலத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு விவசாயி சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்.

  இதன்பின்னர் விதான சவுதாவை நோக்கி விவசாயிகள் தங்களது ஊர்வலத்தை தொடர்ந்தனர். ஆனால் சுதந்திர பூங்கா அருகே தடுப்பு கம்பிகளை வைத்து விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் விதான சவுதா நோக்கி செல்ல அனுமதி மறுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, இரும்பு கம்பிகளை தள்ளி கொண்டு முன்னோக்கி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது.

மந்திரி பேச்சுவார்த்தை

  பின்னர் கோடிஹள்ளி சந்திரசேகர் விவசாயிகளை சமாதானப்படுத்தினர். பின்னர் சுதந்திர பூங்கா முன்பே சாலையில் அமர்ந்து விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தினர். இதுபற்றி அறிந்ததும் கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர் சுதந்திர பூங்காவுக்கு சென்று போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  மேலும் அவர்கள் அளித்த ஒரு கோரிக்கை மனுவையும் அவர் பெற்று கொண்டார். இதையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போக்குவரத்து நெரிசல்

  இந்த போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சுதந்திர பூங்கா வழியாக செல்லும் பஸ்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.

  போராட்டம் எதிரொலியாக மெஜஸ்டிக், அனந்தராவ் சர்க்கிள், சேஷாத்திரி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.