அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்
பழனி பஸ்நிலையத்தில் அரசு பஸ் கண்டக்டரிடம் ரூ.40 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பழனி:
பஸ் கண்டக்டர்
தேனியில் இருந்து பழனிக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. இதில் தேனி மாவட்டம் கண்டமனூரை சேர்ந்த ஆனந்தமுருகன் (வயது 49) கண்டக்டராகவும், தேனியை சேர்ந்த மணிவேல் டிரைவராகவும் இருந்தனர். பயணிகள் அனைவரும் இறங்கியதும், பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.
பின்னர் ஆனந்தமுருகன், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த வகையில் வசூலான ரூ.10 ஆயிரம் மற்றும் தனது சொந்த செலவுக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம், டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஒரு பையில் வைத்து பத்திரப்படுத்தினார். பின்னர் அதனை பஸ் இருக்கையில் வைத்துவிட்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கினார். அதேபோல் டிரைவரும் பஸ்சிலேயே படுத்து தூங்கினார்.
போலீஸ் விசாரணை
பின்னர் காலையில் ஆனந்தமுருகன் எழுந்து பார்த்தபோது, பணம் வைத்திருந்த பை மாயமாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பஸ் முழுவதும் அவர் தேடிப்பார்த்தார். ஆனால் பணப்பை கிடைக்கவில்லை. இதையடுத்து பழனி டவுன் போலீசில் அவர் புகார் கொடுத்தார். இதையடுத்து பஸ் நிலையத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பஸ் நிலைய வளாகத்தில் ஒரு பை கிடப்பது தெரியவந்தது.
உடனடியாக அந்த பையை போலீசார் கைப்பற்றி சோதனையிட்ட போது அதில் டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. ஆனந்தமுருகன் பணத்தை பையில் வைத்து பத்திரப்படுத்துவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர் அசந்து தூங்கிய வேளையில் பஸ்சுக்குள் சென்று பணப்பையை அபேஸ் செய்தனர்.
வலைவீச்சு
பின்னர் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட மர்ம நபர்கள், டிக்கெட்டுகளுடன் பையை பஸ் நிலைய வளாகத்திலேயே போட்டுச்சென்றது் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பஸ்நிலைய வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் பணத்துடன் தப்பிச்சென்ற மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பழனி பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story