தீக்குளிக்க முயன்ற பட்டாசு தொழிலாளி
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டாசு தொழிலாளி தனது குடும்பத்தினர் முன்னிலையில் தீக்குளிக்க முயன்றார்.
விருதுநகர்,
சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது34). இவர் ஈஞ்சார் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் போர்மேனாக வேலை பார்த்துள்ளார். இவரது மனைவி முருகேஸ்வரி (28), மாமனார் ரத்னவேலு (60), மாமியார் குருவம்மா (52) ஆகியோரும் அதே பட்டாசு ஆலையில் வேலை பார்த்துள்ளனர். இவருக்கு ரேணுகா, மேனகா லட்சுமி என மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளும், கமலேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கருப்பசாமிக்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 4 ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் வீடு கட்டித்தருவதாக கூறினார்களாம். ஆனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடு கட்டி தராமல் காலம் கடத்தி வந்ததால் கருப்பசாமி தனக்கு சேரவேண்டிய சம்பளத்தை தருமாறு கோரியுள்ளார். அதற்கும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மறுக்கவே கருப்பசாமி மல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தலின் பேரில் தொழிலாளர் நல அலுவலகத்தில் தனக்கு தரவேண்டிய சம்பளம் பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கோரி மனு செய்துள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்க 6 மாதத்திற்கு மேல் ஆகும் என்று கூறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி நேற்று தனது குடும்பத்தாருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தனக்கு சேர வேண்டிய பணத்தை பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமிருந்து பெற்றுத்தரக் கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தார். இந்நிலையில் தனது கோரிக்கையை வலியுறுத்தி திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவரை தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story