தனியார் தொழிற்சாலை ஊழியர் எரித்து கொலை; கள்ளக்காதலனுடன், மனைவி தலைமறைவு


தனியார் தொழிற்சாலை ஊழியர் எரித்து கொலை; கள்ளக்காதலனுடன், மனைவி தலைமறைவு
x
தினத்தந்தி 14 Sept 2021 2:23 AM IST (Updated: 14 Sept 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியதால் தனியார் தொழிற்சாலை ஊழியர் எரித்து கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலனுடன் தலைமறைவாகி விட்ட மனைவியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

துமகூரு:

கள்ளத்தொடர்பு

  துமகூரு மாவட்டம் ஜெயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணா (வயது 52). இவரது மனைவி அன்னபூர்ணா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் ஊழியராக நாராயணா வேலை பார்த்து வந்தார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில்மட்டும் அவர் துமகூருவுக்கு செல்வது வழக்கம்.

  இந்த நிலையில், அன்னபூர்ணாவுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி நாராயணாவுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் தனது மனைவியிடம் கள்ளத்தொடர்பை கைவிடும்படி கூறியுள்ளார். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

எரித்து கொலை

  கடந்த 11-ந் தேதி இரவு வேலை முடிந்ததும் தனது சொந்த ஊரான புட்டிஹள்ளிக்கு நாராயணா சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருக்கும் போது கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக நாராயணாவுக்கும், அன்னபூர்ணாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே தனது கள்ளக்காதலன் ராமகிருஷ்ணாவை வீட்டுக்கு வரும்படி அன்னபூர்ணா அழைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டில் இருந்த நாராயணாவின் மீது பெட்ரோல் ஊற்றி அன்னபூர்ணா தீவைத்துள்ளார்.

  இதனால் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்துள்ள அவர், அங்கிருந்த சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்துள்ளார். உடனே அங்கு வந்த ராமகிருஷ்ணா அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து நாராயணாவின் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில், பலத்தகாயம் அடைந்தும், உடல் எரிந்தும் பரிதாபமாக இறந்து விட்டார். உடனே அங்கிருந்து அன்னபூர்ணா, ராமகிருஷ்ணா தப்பி ஓடிவிட்டனர்.

தலைமறைவான மனைவி

  இதுபற்றி அறிந்ததும் ஜெயநகர் போலீசார் விரைந்து வந்து நாராயணாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால், நாராயணா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட அன்னபூர்ணா, ராமகிருஷ்ணாவை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story