தசரா விழாவில் பங்கேற்பதற்காக 8 யானைகள் கஜபயணமாக மைசூருவுக்கு வந்தன


தசரா விழாவில் பங்கேற்பதற்காக 8 யானைகள் கஜபயணமாக மைசூருவுக்கு வந்தன
x
தினத்தந்தி 13 Sep 2021 8:56 PM GMT (Updated: 13 Sep 2021 8:56 PM GMT)

தசரா விழாவில் பங்கேற்பதற்காக 8 யானைகள் கஜபயணமாக மைசூருவுக்கு வந்தன. அந்த யானைகள் வருகிற 16-ந்தேதி அரண்மனைக்கு அழைத்து செல்லப்படுகின்றன.

மைசூரு:

மைசூரு தசரா விழா

  கர்நாடக மாநிலம் மைசூருவில் நடக்கும் தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு ஆண்டும், நவராத்திரி பண்டிகையையொட்டி 10 நாட்கள் வெகு விமரிசையாக தசரா விழா கொண்டாடப்படும். இந்த 10 நாட்களும் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்புசவாரி ஊர்வலமும் அரண்மனை வளாகத்தில் மட்டுமே நடந்தது.

  இதேபோல இந்த ஆண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தசரா விழாவை எளிமையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் 15-ந்தேதி அரண்மனை வளாகத்திலேயே நடக்கிறது.

கஜபயணம் தொடக்கம்

  இந்த ஆண்டு தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக மாநிலத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் இருந்து 8 யானைகள் தேர்வு செய்யப்பட்டன. அதாவது, அபிமன்யு, கோபாலசுவாமி, விக்ரமா, காவேரி, தனஞ்செயா, அஸ்வதம்மா, சைத்ரா, லட்சுமி ஆகிய 8 யானைகள் ஆகும். கடந்த ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்த அபிமன்யு யானை தான் இந்த ஆண்டும் அம்பாரியை சுமக்கிறது.

  தசரா விழாவில் பங்கேற்பதற்காக 8 யானைகளின் கஜபயணம் நேற்று தொடங்கியது. இதையயொட்டி பல்வேறு பயிற்சி முகாம்களில் இருந்து 8 யானைகளும் லாரிகளில் வீரனஒசஹள்ளிக்கு வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து 8 யானைகளும் தனித்தனி லாரிகளில் மைசூருவுக்கு கஜபயணமாக அழைத்து வரப்பட்டன.
  
அதாவது வீரனஒசஹள்ளியில் இருந்து இந்த கஜபயணத்தை மந்திரி எஸ்.டி.சோமசேகர், பாரம்பரிய முறைப்படி தொடங்கி வைத்தார். அவர், யானைகளுக்கு வாழைப்பழம், வெல்லம், கரும்பு, கொப்பரை தேங்காய் ஆகியவை கொடுத்து அனுப்பி வைத்தார். அந்த யானைகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து, பின்னர் லாரிகளில் மைசூரு வந்தன.

வருகிற 16-ந்தேதி...

  இதையடுத்து அந்த யானைகள், மைசூரு அசோகப்புரத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு வந்தன. 8 யானைகளும் வனத்துைற அலுவலக வளாகத்தில்
தங்க வைக்கப்பட்டுள்ளன. வருகிற 16-ந்தேதி 8 யானைகளும் பாரம்பரிய முறைப்படி மைசூரு அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளன. பின்னர் அங்கு ஒரு மாதம் வரை யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

  இந்த கஜபயண தொடக்க விழாவில் மாநகராட்சி மேயர் சுனந்தா பாலநேத்ரா, கலெக்டர் பகாதி கவுதம், மாநகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா, போலீஸ் சூப்பிரண்டு சேத்தன், வனத்துறை அதிகாரி கரிகாலன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story