காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் எம்.பி. மரணம்


காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் எம்.பி. மரணம்
x
தினத்தந்தி 14 Sept 2021 2:36 AM IST (Updated: 14 Sept 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் எம்.பி. மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு:

தலையில் காயம்

  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் எம்.பி.. அவருக்கு வயது 80. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் கடந்த ஜூலை மாதம் 18-ந் தேதி உடுப்பியில் உள்ள தனது வீட்டில் யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த பயிற்சியின்போது அவர் தவறி தரையில் விழுந்தார். அப்போது அவரது தலை தரையில் பலமாக பட்டது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அந்த காயம் அவருக்கு பெரிதாக வலியை கொடுக்கவில்லை.

  2 நாட்களுக்கு பிறகு அவருக்கு தலையில் லேசான வலி ஏற்பட்டது. உடனே அவர் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவரது தலையில் அதாவது மூளையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனை சரிசெய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து அவர் அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மரணம்

  அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சுயநினைவை இழந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தனர். 55 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை தேறி நலமுடன் வீடு திரும்புவார் என்று குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவை கேட்டு குடும்பத்தினரும், காங்கிரஸ் தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவருடைய உடல், உடுப்பியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

  ஆஸ்கர் பெர்னாண்டசின் உடல் மங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அஞ்சலிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) வைக்கப்படுகிறது. அதன் பிறகு அவரது உடல் பெங்களூருவுக்கு கொண்டுவரப்படுகிறது. இங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பெங்களூரு வந்து அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு அவரது உடல் இன்றோ (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளையோ (புதன்கிழமை) பெங்களூருவில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

  ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட மந்திரிகள், காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜீவ்காந்தி குடும்பத்திற்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்த அவர், மக்களவைக்கு உடுப்பி தொகுதியில் இருந்து 5 முறையும், மாநிலங்களவைக்கு 4 முறையும் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

  முதல் முறையாக அவர் 1980-ம் ஆண்டு மக்களவைக்கு உடுப்பி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதே போல் 1984, 1989, 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 1998-ம் ஆண்டு முதல் இதுவரை மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டு பணியாற்றி வந்தார். 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை அவர் மன்மோகன்சிங் மந்திரிசபையில் தொழிலாளர் நலன், வேலை வாய்ப்புத்துறை மந்திரியாக பணியாற்றினார்.

நகரசபை கவுன்சிலர்

  வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலன், திட்ட செயலாக்கம் மற்றும் புள்ளியியல் துறையையும் நிர்வகித்தார். 1980-ம் ஆண்டு வாக்கில் கர்நாடக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் பிரிவு தலைவராகவும், 1996-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டுள்ளார். 

ராஜீவ்காந்தியின் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றினார். அரசியலில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு முன்பு அவர் 1972-ம் ஆண்டு உடுப்பி நகரசபை கவுன்சிலராக வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி கல்வியை உடுப்பியில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story