100 பேருக்கு ஒரு கொரோனா தடுப்பூசி முகாம்
திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் 100 பேருக்கு ஒரு தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. இதற்காக கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தினமும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது. மேலும் சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நகரங்களை இலக்காக வைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதன் விளைவாக கொடைக்கானல், பழனி ஆகிய நகராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பகுதிகளில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள், கடை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள் பலர் உள்ளனர்.
இவர்களின் வசதிக்காக 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஒரு முகாம் வீதம் அமைக்கப்பட இருக்கிறது. எனவே குடியிருப்போர் நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் தங்கள் பகுதியை சேர்ந்த 100 பேரை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தலாம். இதற்கு கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 எனும் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story