மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் தேனி மாவட்டம் 3-வது இடத்துக்கு முன்னேறியது கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் தேனி மாவட்டம் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கலெக்டர் முரளிதரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். நேற்று ஒரே நாளில் 95 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதற்காக 23 ஆயிரத்து 800 டோஸ் தடுப்பூசி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
மாவட்டத்தில் மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதன்படி முதல் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 1 லட்சத்து 52 ஆயிரத்து 206 பேருக்கும் செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 ஆயிரத்து 317 கர்ப்பிணிகள், 6 ஆயிரத்து 278 பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
3-வது இடம்
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுமார் 12 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி நிலவரப்படி மாவட்டத்தில் 776 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது. அப்போது தமிழக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தேனி மாவட்டம் 27-வது இடத்தில் இருந்தது. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அந்த பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 419 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தேனி மாவட்டம் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இது அரசு துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story