கோடநாடு வழக்கில் மனோஜூக்கு ஜாமீன் வழங்கும் நிபந்தனையில் தளர்வு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மனோஜூக்கு ஜாமீன் வழங்கும் நிபந்தனையில் தளர்வு அளித்து ஊட்டி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இதில் சயான், திபு, சம்சீர் அலி, ஜித்தின்ஜாய், சதீசன், உதயகுமார், மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, பிஜின் ஆகிய 9 பேர் ஜாமீனில் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 16.07.2021-ந் தேதி ஊட்டி கோர்ட்டு மனோஜூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்படி 2 நபர்கள் பிணை தர வேண்டும். இருவரும் கோவை அல்லது நீலகிரி மாவட்டத்தில் குடியிருக்க வேண்டும். ரூ.50,000 சொத்துக்கான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
மனோஜ் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஜாமீன் தர நபர்கள் இல்லை. இதனால் அவர் குன்னூர் சிறையிலேயே இருந்து வந்தார். இதற்கிடையில், ஊட்டி கோர்ட்டில் மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் மனோஜ் தரப்பு வக்கீல் முனிரத்தினம் ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்த கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது நீதிபதி தள்ளிவைத்தார்.
இந்த நிலையில் நேற்று அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வாளையாறு மனோஜூக்கு ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்த கூடாது என்று காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
வக்கீல் முனிரத்தினம் வாய்மொழியாக ஆட்சேபணை இல்லை என்று காவல்துறை நேற்று முன்தினம் தெரிவித்தது என்றும், இன்று (அதாவது நேற்று) எழுத்துப்பூர்வமாக கடும் ஆட்சேபனை தெரிவிப்பதாக நீதிபதியிடம் கூறினார். மேலும் ரத்த உறவினர்கள் பிணை தர தயாராக உள்ளனர் என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா கேரளா மாநிலத்தை சேர்ந்த மனோஜின் ரத்த உறவினர்கள் 2 பேர் பிணை தரலாம் என்று நிபந்தனையில் தளர்வு அளித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மனோஜின் மனைவி மற்றும் உறவினர் ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு சொத்து ஆவணங்களை தாக்கல் செய்து பிணை தர தயாராக உள்ளனர். அவர்கள் இன்னும் சில நாட்களில் கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் வாளையாறு மனோஜ் விரைவில் ஜாமீனில் வெளியே வர வாய்ப்புள்ளதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story