மசினகுடி அருகே காட்டு யானை மர்ம சாவு


மசினகுடி அருகே காட்டு யானை மர்ம சாவு
x
தினத்தந்தி 14 Sept 2021 10:11 PM IST (Updated: 14 Sept 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே காட்டு யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிமண்டல பகுதியாக மசினகுடி, சிங்காரா, சீகூர் வனச்சரகங்கள் உள்ளது. இங்கு காட்டு யானைகள், கரடிகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

இந்த நிலையில் சீகூர் வனத்துறையினர் நேற்று வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மாலை 4 மணிக்கு குண்டஹட்டி ஹல்லா வனப்பகுதியில் உள்ள நீரோடை கரையில் பெண் காட்டு யானை ஒன்று மர்மமாக இறந்து கிடந்ததை கண்டனர். 

ஆனால் இறப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் முரளி தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனை

தொடர்ந்து மாலை வெகு நேரம் ஆனதால் போதிய வெளிச்சம் இல்லாமல் போனது. இதைத்தொடர்ந்து இன்று (15-ந் தேதி) காட்டு யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

 இதன் காரணமாக காட்டுயானைகள் உடல் அருகே வன ஊழியர்கள் இரவு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டு யானை வனப்பகுதியில் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

காரணம் தெரியவில்லை

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
காட்டு யானை உடலில் எந்த காயமும் இல்லை. ஆனால் என்ன காரணத்துக்காக இருந்தது என தெரியவில்லை இது தொடர்பாக கால்நடை மருத்துவக் குழுவினர் பிரேதப் பரிசோதனை நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே முழு விவரம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story