2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி
2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி
கிருஷ்ணகிரி, செப்.15-
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அரசு அருங்காட்சியகம்
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஒரு அரியபொருள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாத (செப்டம்பர்) சிறப்பு காட்சிப் பொருளாக 2.500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
இது ஒரு சிறிய வகை தாழியாகும். குழந்தைகளுக்கான தாழியாக இருக்கலாம். இது வழவழப்பாக்கப்பட்ட சிவப்பு வண்ண பானை வகையைச் சேர்ந்தது. வெளிப்பகுதி அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்புப்பகுதி உடைந்துள்ளது.
இக்காலமக்கள் உள்பக்கம் கருப்பும், வெளிப்பக்கம் சிவப்பு நிறத்தைக் கொண்ட மெல்லிய, ஆனால் மிகவும் உறுதியான மண்பாண்டங்களை பயன்படுத்தியுள்ளனர். இறந்தவர்களின் நினைவாக பெரிய கற்களைக் கொண்டு கற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல், கல்வட்டம் என பலவகையான நினைவுச்சின்னங்களை எழுப்பியுள்ளனர். அதனுள் இத்தகைய தாழி அல்லது விலங்கு வடிவிலான சுடுமண் பெட்டி வைத்திருப்பர்.
முதுமக்கள் தாழி
பொதுவாக முதுமக்கள் தாழியானது, 4 அடி உயரத்தில் 2 அடி விட்டத்தில் இளஞ்சிப்பு நிறத்தில் மணல் கலந்து செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்பகுதி கூம்புபோல் இருக்கும். இது பெண்களின் கர்ப்பப்பையை உருவகப்படுத்துவதாகும். இறந்தவர்கள் மீண்டும் கர்ப்பப் பைக்குள் சென்று மறுப்பிறப்பு எடுப்பதாகக் கருதும் அக்கால மக்களின் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது. இத்தகைய தாழிக்குள் அவர்களது முக்கிய எலும்புகள் சிலவற்றோடு அவர்கள் பயன்படுத்திய இரும்புக்கருவிகள், உண்பதற்கும், நீர் அருந்துவதற்கும் பயன்படுத்திய மண் கலண்கள் ஆகியவற்றையும் உடன் வைத்திருப்பர்.
காட்சியில் உள்ள இத்தாழியானது, கிருஷ்ணகிரி வட்டம் பீமாண்டப்பள்ளியில் கிடைத்ததாகும். இதனுள் இறந்த குழந்தை ஒன்றின் ஒரு சில எலும்புகளை வைத்து புதைத்து, புதைவிடத்தில் பெரியகற்களைக் கொண்டு நினைவுச் சின்னம் எழுப்பியிருக்கவேண்டும். தற்போது அக்கற்கள் விவசாயத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இத்தாழியின் காலத்தை பெருங்கற்படைக் காலம் எனக் குறிப்பிடுவர். சங்க இலக்கியங்கள் இதனை முதுமக்கள் தாழி எனக் குறிப்பிடுகின்றன. இரும்பின் பயன்பாட்டை மனிதன் முதன் முதலாகக் கண்டறிந்தகாலம் இது. இத்தகைய முதுமக்கள் தாழிகளை நிலத்தில் பொதுமக்கள் கண்டால் அதனை உடைத்துவிடாமல் அருங்காட்சியகத்துக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story