ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு


ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Sep 2021 5:13 PM GMT (Updated: 14 Sep 2021 5:13 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் டி.மோகன் ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளையும், அரகண்டநல்லூர் ஸ்ரீலட்சுமி வித்யாஸ்ரமம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளையும் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான டி.மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறை, வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புக்கட்டை வசதி, வாக்குகள் எண்ணும் இடம், தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய ஊடக மைய அறை, மருத்துவக்குழுவினருடன் மருத்துவ அறை, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

அடிப்படை வசதிகள்

இதனை தொடர்ந்து காணை, முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதையும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்கள், வாக்குப்பெட்டிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் டி.மோகன் பார்வையிட்டார்.
பின்னர் பெரும்பாக்கம், சென்னகுணத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மையங்களையும் பார்வையிட்டார். அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்குவதற்கான அறைகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிதில் வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலி செல்லும் வகையில் சாய்வுதள வசதி, தடையில்லா மின்சார வசதியுடன் கூடிய மின்விளக்கு, மின்விசிறி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும்படி உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் டி.மோகன், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 6,097 பதவியிடங்களுக்கு 

விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக 2,948 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 694 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 688 ஊராட்சிகளில் அடங்கிய 5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான ஆண் வாக்காளர்கள் 6,87,420 பேரும், பெண் வாக்காளர்கள் 6,96,115 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 158 பேரும் ஆக மொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் 31 தேர்தல் நடத்து அலுவலர்களும், 904 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஈடுபடுவார்கள். வேட்பு மனுக்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (புதன்கிழமை) முதல் 22-ந் தேதி வரை அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடித்து தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற அனைத்து விதத்திலும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காணை முபாரக், முகையூர் சீனிவாசன், சாம்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story