வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆட்சேபனை இருந்தால் 19-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம்.
விழுப்புரம்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பான) வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் வெளியிட்டார்.
இந்த பட்டியலில் செஞ்சி சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குச்சாவடிகளும், மயிலம் தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 264 வாக்குச்சாவடிகளும், வானூர் (தனி) தொகுதியில் 277 வாக்குச்சாவடிகளும், விழுப்புரம் தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும், விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், திருக்கோவிலூர் தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும் என சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 1,957 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளது.
ஆட்சேபனை தெரிவிக்கலாம்
இந்த பட்டியலில் வாக்குச்சாவடிகளின் அமைவிடம் குறித்து ஏதேனும் ஆட்சேபனை மற்றும் வாக்குச்சாவடிகளை இடமாற்றம் செய்வது தொடர்பான ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால் வருகிற 19-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அல்லது திண்டிவனம் சப்-கலெக்டர், விழுப்புரம், திருக்கோவிலூர் கோட்டாட்சியர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், அனைத்துக்கட்சி பிரதிநிதிகளை கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மோகன் (பொது), ராமகிருஷ்ணன் (தேர்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story