ஐகோர்ட்டு உத்தரவு நகல் விழுப்புரம் கோர்ட்டில் சமர்பிப்பு


ஐகோர்ட்டு உத்தரவு நகல் விழுப்புரம் கோர்ட்டில் சமர்பிப்பு
x
தினத்தந்தி 14 Sept 2021 10:51 PM IST (Updated: 14 Sept 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தொடர்ந்த பாலியல் வழக்கை விசாரிக்க முகாந்திரம் உள்ளதாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகல் விழுப்புரம் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை மீண்டும் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

விழுப்புரம், 

கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகினார். சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் வீரமணி ஆஜராகி சிறப்பு டி.ஜி.பி. ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தார்.
இதற்கிடையில் இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராது, எனவே இவ்வழக்கை இங்கு விசாரிக்கக்கூடாது என்று ஏற்கனவே சிறப்பு டி.ஜி.பி. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 
விசாரிக்க முகாந்திரம்...
இது தொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வைத்தியநாதன், இவ்வழக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலேயே விசாரிக்க முகாந்திரம் உள்ளதாகவும், இங்கேயே விசாரிக்க முழு அதிகாரமும் உண்டு என்று ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக கூறி அதற்கான ஐகோர்ட்டு உத்தரவு நகலை சமர்பித்தார்.
இதன் மீது எதிர்தரப்பு வாதாடுவதற்காக இவ்வழக்கின் விசாரணை மீண்டும் நாளை (அதாவது இன்று) நடைபெறும் என்று நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். 


Next Story