ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குகிறது
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் மாலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 28 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 293 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 688 கிராம ஊராட்சி தலைவர், 5,088 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 6,097 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
2 கட்டங்களாக
இதில் முதல்கட்டமாக அக்டோபர் 6-ந் தேதியன்று செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கும், 2-ம் கட்டமாக 9-ந் தேதி காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக 2,948 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 688 ஊராட்சிகளில் அடங்கிய 5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கான ஆண் வாக்காளர்கள் 6,87,420 பேரும், பெண் வாக்காளர்கள் 6,96,115 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 158 பேரும் ஆக மொத்தம் 13,83,687 வாக்காளர்கள் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி
அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 412 கிராம ஊராட்சி தலைவர், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 6-ந் தேதி திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களிலும், 2-வது கட்டமாக அக்டோபர் 9-ந் தேதி கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக 1,889 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 412 கிராம ஊராட்சிகளில் அடங்கிய 3,162 ஊராட்சி வார்டுகளில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 841 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 77 ஆயிரத்து 887 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 186 என மொத்தம் 9 லட்சத்து 61 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.
இன்று வேட்பு மனுதாக்கல்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 3 தேர்தல்களுக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
முன்னேற்பாடு
இதையொட்டி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களில் 100 மீட்டர் இடைவெளிக்கு அடையாளமாக வெள்ளை கோடுகள் வரையப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
அதுபோல் ஏற்கனவே அரசியல் கட்சியினரால் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியிலும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கட்சி கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளையும் அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story