சங்கராபுரம் அருகே பரபரப்பு ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்
சங்கராபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மூங்கில்துறைப்பட்டு
அதிக பணம் தருபவர்களுக்கு...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஒரு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-.
சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள உலகலாப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 3 பேருக்கு மேல் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. இதில் ஊராட்சிக்குட்பட்ட சவேரியார்பாளையம் பகுதியில் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் யார் அதிக பணம் தருகிறார்களோ? அவரையே பொதுமக்கள் ஓட்டுப்போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
பதவி ஏலம்
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம் தேவாலயம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் வந்தனர். ஊர் முக்கியஸ்தர்கள் லட்சம் ரூபாயில் இருந்து ஏலத்தை தொடங்கினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தவர்களில் அதிக அளவில் யார் பணம் தருவது என்று போட்டி போட்டு அறிவித்தனர். ஆனால் நேற்று இரவு 10 மணி வரை முடிவு எட்டப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து அக்கிராம இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்த்துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏலம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story