தந்தையை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் கைது
கீழ்வேளூர் அருகே தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்த தந்தையை கழுத்தை அறுத்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கீழ்வேளூர்:
கீழ்வேளூர் அருகே தினமும் மது குடித்து விட்டு தகராறு செய்த தந்தையை கழுத்தை அறுத்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டு இறைச்சி கடை
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் அருகே உள்ள இருக்கை ஊராட்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் செய்யது முபாரக்(வயது 50). இவர், ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருக்கு ஹாஜிராம்மா என்ற மனைவியும், சதாம் உசேன்(24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கத்தார் நாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த சதாம் உசேன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். செய்யது முபாரக் தினமும் மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
கழுத்தை அறுத்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் செய்யது முபாரக் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி ஹாஜிராம்மாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இதை பார்த்த சதாம் உசேன், தனது தந்தையிடம், தினமும் குடித்து விட்டு வந்து ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார்.
இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதாம் உசேன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தை செய்யது முபாரக்கை கீழே தள்ளி கழுத்தை அறுத்து உள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயக்கம் அடைந்துள்ளார்.
பரிதாப சாவு
இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த செய்யது முபாரக்கை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செய்யது முபாரக் பரிதாபமாக உயிரிழந்தார்.
கைது
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர்.
மதுகுடித்து விட்டு தகராறு செய்த தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story