விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சுரங்கம் அமைக்க வேண்டும்
விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் சுரங்கம் அமைக்க வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடையார்பாளையம்
கருத்து கேட்பு கூட்டம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், மணகெதி மற்றும் தத்தனூர் கிராமங்களில் அமைந்துள்ள அருணா பயர்க்ளே சுரங்கம் விஸ்தீரணம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கி பேசினார். இக்கூட்டத்தில், சுண்ணாம்புக்கல் சுரங்கம் செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமம் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
மேலும், இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மாசுக்கட்டுபாடுகள் குறித்தும் மற்றும் கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தங்களின் கோரிக்கைகள் குறித்தும் கருத்துக்களை பதிவு செய்தார்கள். பின்னர், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
வேகக்கட்டுபாட்டு கருவிகள்
தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் சங்கர், செங்கமுத்து, தத்தனூர் மாவட்ட கவுன்சிலர் நல்ல முத்து, பழனிவேல், முத்துசாமி, ராஜசேகர் உள்ளிட்டோர் பேசுகையில், சுரங்கம் அமைக்கப்படும் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில், அரசின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுத்த வேண்டும். லாரிகளுக்கு வேகக்கட்டுபாட்டு கருவிகள் பொருத்துப்படவேண்டும். ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற தார்ப்பாய்களை கொண்டு லாரிகளில் ஏற்றிச்செல்லும் மூலப்பொருட்களை மூடிச் செல்ல வேண்டும். சமூக பொருப்புணர்வு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதிகளை சுரங்கம் அமைந்துள்ள பகுதி கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதருவதற்கு செலவிட வேண்டும். இப்பகுதிகளில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களை அரவணைத்து, பொருளாதாரத்தில் அவர்கள் மேம்பட சுயத்தொழில்களை ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (பொறுப்பு) வெங்கடேசன், கோட்டாட்சியர் அமர்நாத் மற்றும் ஆலைத்தலைவர், பணியாளர்கள், அலுவலர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story