திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள். கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவிப்பு


திருப்பத்தூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள். கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 6:56 PM GMT (Updated: 14 Sep 2021 6:56 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மநு தாக்கல் செய்யும் இடங்கள் மற்றும் கட்டுப்பாடுளை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மநு தாக்கல் செய்யும் இடங்கள் மற்றும் கட்டுப்பாடுளை கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 208 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
ஜோலார்பேட்டை, கந்திலி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 83 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 137 கிராம ஊராட்சி தலைவர், 1,188 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6.10.2021 அன்று முதல் கட்டமாக  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியங்களில் 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 42 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 71 கிராம ஊராட்சி தலைவர், 591 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 9.10.2021 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல்

இந்த தேர்தலில் 3,29,959 ஆண் வாக்காளர்கள், 3,34,115 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 34 பேர் எனமொத்தம் 6,64,108 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் முதல்கட்ட தேர்தலில் 4,47,292 வாக்காளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 2,16,814 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
வேட்பு மனுக்கள் இன்று (15-ந் தேதி) முதல் கீழகாணும் அலுவலகங்களில் பெறப்பட உள்ளது.

13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 208 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும். 1,779 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும்.

கட்டுப்பாடுகள்

வேட்பு மனு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பாளர்களின் கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றவியல் நடவடிக்கை  ஆகியவற்றை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சாற்றுரை அளித்தால் போதுமானது. 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேட்பு மனுவினை தாக்கல் செய்திட வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் மட்டுமே அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு 200 மீட்டர் தொலைவு வரை  அதிகப்படியாக 3 வாகனங்கள் மட்டுமே வர அனுமதிக்கப்படும்.
வேட்பாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், கையுறை, முககவசம் அமிந்து வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story